திமுகவில் திடீர் விரிசல்! ஸ்டாலின், உதயநிதியை சந்திப்பதை தவிர்க்கும் செந்தில் பாலாஜி! விலக முடிவு?!
சென்னையில் இருந்தபோதும் கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஆகியோரை சந்திப்பதை முடிந்தவரை தவிர்ப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
சென்னை: தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சமீபகாலமாக கட்சித் தலைமையிடம் இருந்து விலகியே செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் மீது நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகளுக்கு மத்தியில், தி.மு.க., தலைமைக்கும் செந்தில் பாலாஜிக்கும் இடையே முன்பிருந்த நெருக்கம் குறைந்துவிட்டதாக கட்சி வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு, டாஸ்மாக் மதுபான கொள்முதல் தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் செந்தில் பாலாஜிக்கு எதிராக நிலுவையில் உள்ளன. மேலும், தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ.,க்களிடம் ஆட்சி கவிழ்ப்பு தொடர்பாக பேரம் பேசியதாக கூறப்படும் வழக்கும் அரசியல் ரீதியாக கவனம் பெற்றுள்ளது.
தி.மு.க., ஆட்சிக் காலத்தில் இலாகா இல்லாத அமைச்சராகவும் செந்தில் பாலாஜி நீண்ட காலம் தொடர்ந்தார். இதன் மூலம், கட்சித் தலைமையிடம் அவருக்கு இருந்த முக்கியத்துவம் வெளிப்பட்டதாக அப்போது அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. ஆனால், தொடர்ந்து எழுந்த புகார்கள் மற்றும் வழக்குகள் காரணமாக தற்போது தலைமை மட்டத்தில் அவரது செல்வாக்கு குறைந்துள்ளதாக தி.மு.க., வட்டாரங்கள் கூறுகின்றன.
இதையும் படிங்க: சூடு பிடிக்கிறது டாஸ்மாக் முறைகேடு வழக்கு! ஐஏஎஸ் அதிகாரி விசாகனை நெருங்கும் போலீஸ்! விசாரணை தீவிரம்!
குறிப்பாக, தேர்தல் தோல்விக்கான காரணங்களை கட்சி தரப்பு ஆய்வு செய்தபோது செந்தில் பாலாஜி தொடர்பான விவகாரங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. மூத்த நிர்வாகிகள் சிலர் தொடர்ந்து தெரிவித்த அதிருப்தியும் அவரது மீதான தலைமை நம்பிக்கையை பாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, தன்னை பாதுகாப்பதில் கட்சித் தலைமை இனி முன்பைப் போல உதவாது என்ற எண்ணம் செந்தில் பாலாஜி தரப்பில் உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, மத்திய விசாரணை அமைப்புகள் தொடர்பான வழக்குகளில் டெல்லி அரசியல் தொடர்புகளை நேரடியாக பயன்படுத்த அவர் முயற்சிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், தி.மு.க., தலைமையிலிருந்து வரும் அழைப்புகளை செந்தில் பாலாஜி பல்வேறு காரணங்களைக் கூறி தவிர்த்து வருவதாகவும், சென்னையில் இருந்தபோதும் கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஆகியோரை சந்திப்பதை முடிந்தவரை தவிர்ப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
சட்டசபையிலும் தி.மு.க., மூத்த நிர்வாகிகளுடன் அவர் முன்புபோல் நெருக்கமாக இருப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. அவரது தற்போதைய அரசியல் நிலைப்பாடு என்ன என்பது தெளிவாக தெரியாததால், தி.மு.க., தலைமையும் குழப்பத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், செந்தில் பாலாஜி தரப்பில் இருந்து இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகாத நிலையில், கட்சிக்குள் உண்மையில் விரிசல் ஏற்பட்டுள்ளதா அல்லது இது அரசியல் வட்டாரங்களில் பரவும் தகவல்களா என்பது அடுத்தகட்ட நகர்வுகளில்தான் தெரியவரும்.
இதையும் படிங்க: 'நான் சிறையைப் பார்த்தவன்'! எதற்கும் அஞ்ச மாட்டேன்! காவல் நிலையத்தில் ஆஜரான செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி!