175 பேருடன் வந்த விமானம்... தரையிறங்கும் முன் மீண்டும் வானில் பறந்ததால் அதிர்ச்சி!
ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானம் தரையிறங்கும் போது திடீரென மீண்டும் மேலே பறந்து தரையிறங்கியது. ஓடுதள பாதுகாப்பை மேம்படுத்த பிடிஆர் வலியுறுத்தியுள்ளார்.
ஹைதராபாத்தில் இருந்து 175 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், ஓடுதளத்தில் தரையிறங்கும் கடைசித் தருணத்தில் திடீரென மீண்டும் வானில் செங்குத்தாகப் பறந்து சில நிமிடங்கள் கழித்துப் பத்திரமாகத் தரையிறங்கிய சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 168 பயணிகள், 7 விமானப் பணியாளர்கள் என மொத்தம் 175 பேருடன் புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், வழக்கமான நேரத்திற்கு முன்பாக மாலை 5.20 மணியளவில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் ஓடுதளத்தை நோக்கித் தரையிறங்க வந்தது. தரைக்கு மிக அருகில் தாழ்வாகப் பறந்த அந்த விமானம், எதிர்பாராதவிதமாகத் தரையிறங்கும் முயற்சியைக் கைவிட்டுவிட்டு, மீண்டும் வானில் உயரப் பறக்கத் தொடங்கியது.
இதனால் விமானத்திற்குள் இருந்த பயணிகள் பெரும் அதிர்ச்சிக்கும் பீதிக்கும் உள்ளாகினர். வானில் சில நிமிடங்கள் வட்டமடித்த அந்த விமானம், பின்னர் மாலை 5.26 மணியளவில் சென்னை ஓடுதளத்தில் பத்திரமாகத் தரையிறங்கியது.ஓடுதளத்தில் ஏற்பட்ட எதிர்பாராத இயக்கம் மற்றும் செயல்பாடுகள் காரணமாக, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையின் (ATC) அறிவுறுத்தலின் பேரிலேயே விமானம் மீண்டும் மேலே பறக்க வைக்கப்பட்டுப் பின்னர் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது என விமானிகள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: திருவொற்றியூரில் பயங்கரம்: சக மாணவர்கள் தாக்கியதில் பிளஸ்-2 மாணவன் உயிரிழப்பு!
இந்த விமானத்தில் பயணம் செய்த தமிழ்நாடு அரசின் முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன், இச்சம்பவம் குறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஓடுதள நடைமுறைகளில் ஏற்படும் இதுபோன்ற எதிர்பாராத விலகல்கள், உள்கட்டமைப்பு குறைபாடு அல்லது ஏடிசி (ATC) கட்டுப்பாட்டாளர்களின் அதிகப்படியான பணிச்சுமையின் அறிகுறிகளாக இருக்கக்கூடும் என்றும், இது ஒட்டுமொத்த விமானப் போக்குவரத்து அமைப்பிற்கே ஆபத்தை ஏற்படுத்தலாம் என்றும் எச்சரித்துள்ளார். மேலும், விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) மற்றும் ஒன்றிய விமானப் போக்குவரத்து அமைச்சகம் இத்தகைய ஒவ்வொரு சம்பவத்தையும் தீவிரமாக ஆய்வு செய்து ஓடுதள பாதுகாப்பு நடைமுறைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கையில், ஓடுதளத்தில் ஏதேனும் குறுக்கீடுகள் அல்லது எதிர்பாராத சூழல்கள் ஏற்படும் போது, விமானப் பாதுகாப்பு விதிகளின்படி விமானங்களை மீண்டும் மேலே பறக்கவிட்டுப் (Go-Around) பின்னர் தரையிறக்குவது வழக்கமான ஒன்றுதான் என்றும், சென்னை விமான நிலையத்தின் ஓடுதளங்கள் 100% முழு பாதுகாப்புடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 80-வது சுதந்திர தின விழா: சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு தீவிர பாதுகாப்பு!