சட்டசபை தேர்தலில் மீண்டும் போட்டியா? துரைமுருகனுக்கு திமுக போட்ட கன்டிஷன்! அமைச்சர் பதவிக்கு ஆப்பு!
'அமைச்சர் பதவி வேண்டாம் என ஒப்புக்கொண்டால் மட்டுமே, இம்முறை 'சீட்' வழங்கப்படும்' என, அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
தி.மு.க. மூத்த தலைவரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனுக்கு கட்சித் தலைமை திடீர் நிபந்தனை விதித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ராணிப்பேட்டை மற்றும் காட்பாடி தொகுதிகளில் 10 முறை போட்டியிட்டு 8 முறை வெற்றி பெற்ற அனுபவசாலியான துரைமுருகனுக்கு இந்த முறை சீட் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், “அமைச்சர் பதவி வேண்டாம் என்று ஒப்புக்கொண்டால் மட்டுமே சீட் தரப்படும்” என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
காட்பாடி தொகுதியில் 1996 முதல் தொடர்ச்சியாக 6 முறை எம்.எல்.ஏ.வாக இருந்து வரும் துரைமுருகன், கருணாநிதி ஆட்சியில் பல்வேறு துறைகளில் அமைச்சராகப் பதவி வகித்தவர். சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் கூட கலகலப்பாக பேசி விவாதங்களை சுமுகமாக மாற்றும் திறன் கொண்டவர் என்று அறியப்படுகிறார்.
சமீப காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வரும் துரைமுருகன், முதுகெலும்பு முறிவுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டும், கட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இதை காரணம் காட்டி அவருக்கு சீட் கொடுக்காமல் தவிர்க்க தி.மு.க. தலைமை முயன்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் துரைமுருகன் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதையும் படிங்க: காட்பாடியில் மீண்டும் போட்டி? களமிறங்கும் துரைமுருகன்?! வயது முதிர்வு காரணமாக சீட் மறுப்பா? அப்டேட் தகவல்!
இந்நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துரைமுருகனை சந்தித்துப் பேசியதாகவும், “ஒரு வாய்ப்பு தாருங்கள்” என்று துரைமுருகன் கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இறுதியில் சீட் கொடுக்க முடிவு செய்யப்பட்டாலும், அமைச்சர் பதவி தர முடியாது என்ற நிபந்தனையை தலைமை விதித்துள்ளது.
துரைமுருகன் தரப்பில் இதுவரை எந்தப் பதிலும் வராததால், கட்சிக்குள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 10 முறை சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனுபவசாலியான துரைமுருகனுக்கு இப்படி ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பது தி.மு.க.வில் பெரும் பேச்சாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: கிராவல் மண் குவாரி ஒப்பந்ததாரர் மாற்றம்! அமைச்சர் தலையீடு காரணமா? தேர்தல் நேர பரபரப்பு!