காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் சிலைகளில் பொட்டு தங்கமில்லை?!! பக்தர்கள் தந்த 312 சவரன் என்னாச்சு? அதிர்ச்சி!!
புதிதாக சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார்குழலி அம்மன் சிலைகள் செய்தபோது, 5 சதவீதம் தங்கம் சேர்க்க வேண்டும் என்பது விதி. அதாவது, 8.7 கிலோ தங்கம் சேர்த்திருக்க வேண்டும்.
காஞ்சிபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த ஏகாம்பரநாதர் கோயிலில் உற்சவர் சிலைகள் செய்த போது தங்க மோசடி நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கு தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது. 2015ஆம் ஆண்டு கோயிலின் பழைய உற்சவர் சிலை சேதமடைந்ததால், புதிதாக சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார்குழலி அம்மன் சிலைகளை செய்ய இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்தது.
இந்த சிலைகளை பஞ்சலோகத்தில் செய்யும் போது 5 சதவீத தங்கம் கலக்க வேண்டும் என்று விதி உள்ளது. அதன்படி சுமார் 8.7 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட வேண்டும். மேலும், பக்தர்களிடமிருந்து நன்கொடையாக 312 சவரன் தங்க நகைகள் பெறப்பட்டன. இவற்றின் தற்போதைய மதிப்பு சுமார் 3.12 கோடி ரூபாய் ஆகும்.
ஆனால், புதிய சிலைகளில் துளி தங்கம் கூட சேர்க்கப்படவில்லை என்று காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் 2017இல் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் சிவகாஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கோயில் செயல் அலுவலர் முருகேசன், ஸ்தபதி மாசிலாமணி, அர்ச்சகர்கள் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு பதிவானது.
இதையும் படிங்க: திண்டுக்கல்லில் முதல்வர்... மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள்...!
பின்னர் வழக்கு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரணை நடத்தியது. ஐ.ஐ.டி. நிபுணர்கள் ஆய்வில் சிலைகளில் தங்கம் இல்லை என உறுதியானது. இதையடுத்து அறநிலையத்துறை முன்னாள் கமிஷனர் வீரசண்முகமணி, கூடுதல் கமிஷனர் கவிதா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
வழக்கு சில காலம் முடங்கிய நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 2023இல் சிவகாஞ்சி போலீசார் மீண்டும் விசாரணையைத் தொடங்கினர். காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் முன்னர் குற்றம்சாட்டப்பட்ட முருகேசன் மற்றும் மாசிலாமணி ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டன. அதற்கு பதிலாக வீரசண்முகமணி மற்றும் கவிதா ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டன.
2017இல் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை 2023இல் திருத்தப்பட்டு, மனுதாரர் அண்ணாமலைக்கு வழங்கப்பட்டது. திருத்தப்பட்ட எப்.ஐ.ஆரில் பக்தர்களிடம் பெறப்பட்ட 312 சவரன் தங்கத்தில் துளி கூட சிலையில் சேர்க்கப்படவில்லை என பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியுள்ளது. முன்னாள் கமிஷனர் வீரசண்முகமணி, கூடுதல் கமிஷனர் கவிதா, ஸ்தபதி முத்தையா, அர்ச்சகர்கள் உள்ளிட்ட 9 குற்றம்சாட்டப்பட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. வழக்கு குறித்த கருத்துக்களை நீதிமன்றம் கேட்டறிந்த பிறகு, அடுத்த விசாரணையை பிப்ரவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இதற்கிடையே, பக்தர் தினேஷ் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட தகவலுக்கு கோயில் நிர்வாகம் அளித்த பதிலில், 2015இல் சுவாமிமலையில் மாசிலாமணி ஸ்தபதியால் சிலைகள் செய்யப்பட்டதாகவும், செய்யும் போது வீடியோ பதிவு எதுவும் எடுக்கப்படவில்லை எனவும், பக்தர்களின் தங்க நன்கொடைக்கு ரசீது வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பக்தர்களிடம் தங்கம் பெற்றது எந்த அடிப்படையில் என்பது கேள்விக்குள்ளாகியுள்ளது.
இந்த வழக்கு கோயில் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பக்தர்களின் நன்கொடைகளின் பயன்பாடு குறித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணையில் உண்மை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இந்துக்களை விரட்டி வேட்டையாடும் கும்பல்!! வங்கதேசத்தில் மேலும் ஒரு இளைஞர் பலி!! அதிர்ச்சியூட்டம் சம்பவம்!