வெளியேறுகிறதா இண்டிகோ!! தமிழகத்தில் படிப்படியாக குறைக்கப்படும் விமான சேவைகள்?!
சென்னை, கோவை, திருச்சி, மதுரை விமான நிலையங்களில், 'இண்டிகோ' விமான சேவைகள் திடீரென குறைக்கப்பட்டுள்ளன.
சென்னை: நாட்டின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ, தமிழகத்தின் முக்கிய விமான நிலையங்களான சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகியவற்றில் விமான சேவைகளை திடீரென குறைத்துள்ளது. மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) விதித்த புதிய பைலட் பணி நேர விதிகளை காரணமாகக் காட்டி, டிசம்பர் தொடக்கம் முதல் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதனால், விமான நிலையங்களில் பயணிகள் பெரிதும் தவித்தனர். முன்பதிவு செய்த டிக்கெட் கொண்டவர்கள் மாற்று வழி தேடி அலைந்தனர். மத்திய அரசு தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியதும், சில விதிகளுக்கு தற்காலிக தளர்வு அளிக்கப்பட்டது. இருப்பினும், தமிழக விமான நிலையங்களில் இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்படுவது தொடர்கிறது.
சென்னை விமான நிலையத்தில் டிசம்பர் 1 முதல் 9 வரை 629 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கோவையில் பல சேவைகள் ரத்தாகின. திருச்சியில் சென்னைக்கான 6 தினசரி விமானங்களில் 4 ரத்து செய்யப்பட்டு, டிசம்பர் 16 முதல் 2 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. மதுரை உள்ளிட்ட இடங்களுக்கும் சேவை குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் தீபம்! மதக்கலவரத்தை துாண்டுகிறது திமுக! அண்ணாமலை ஆவேசம்!
விமான போக்குவரத்து வல்லுனர்கள் கூறுகையில், தமிழகம் மாநிலங்களுக்கு இடையேயான விமான போக்குவரத்தில் முன்னணியில் உள்ளது. சென்னையுடன் இணைக்கும் தினசரி சேவைகளை இண்டிகோவே அதிகம் வழங்கி வந்தது. திடீர் குறைப்பால் டிக்கெட் கட்டணம் உயர வாய்ப்புள்ளது.
மற்ற விமான நிறுவனங்கள் சேவையை அதிகரிக்க முன்வராததும் புதிராக உள்ளது. தமிழகத்தின் இரண்டாம் நிலை நகரங்களில் விமான சேவை வளர்ந்து வரும் நிலையில், இக்குறைப்பு பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
இண்டிகோ நிறுவனம் இயல்பு நிலைக்கு திரும்ப முயற்சிப்பதாக தெரிவித்தாலும், பயணிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க: எத்தியோப்பியாவில் ஒலித்தது வந்தே மாதரம் பாடல்!! உற்சாகத்துடன் கைதட்டி ரசித்த பிரதமர் மோடி!