ஓயாத திருப்பரங்குன்றம் சர்ச்சை! நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகம்! ஹைகோர்ட் அதிரடி தடை!
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்தை தமிழக அரசு பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களுக்கு எதிராக எழுதப்பட்ட புத்தகத்தை தமிழக அரசு பறிமுதல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் நடைபெறும் 49ஆவது புத்தகக் கண்காட்சியில் இப்புத்தகம் விற்பனைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தடுக்கவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வேலூரைச் சேர்ந்த நவீன் பிரசாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இப்புத்தகம் நீதிபதிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். புத்தகக் கண்காட்சியில் இதை விற்றால் நீதி நிர்வாகத்தில் தலையீடு ஏற்படும் என்றும் அவர் வாதிட்டார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி அருள்முருகன் அமர்வு, புத்தகத்தை விற்பனை செய்ய அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டது.
இதையும் படிங்க: மதக்கலவரம் ஏற்படுத்த மும்முரம்... திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மேல்முறையீடு தேவை... திருமா வலியுறுத்தல்...!
விசாரணையின்போது அரசு தரப்பு வழக்கறிஞர் ஏ.ஆர். சுந்தரேசன், புத்தகத்தில் களங்கப்படுத்தும் வார்த்தைகள் உள்ளதாகக் கூறினார். காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று பி.எஸ். ராமன் உறுதியளித்தார். நீதிபதிகள், "அறிவுசார் தளமான புத்தகக் கண்காட்சியில் இது போன்ற செயல்களை அனுமதிக்க முடியுமா?" என்று கேள்வி எழுப்பினர்.
புத்தகத்தை வெளியிட்ட கீழைக்காற்று பதிப்பகம் மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விற்பனை நடக்காமல் இருப்பதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. வழக்கு விசாரணை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இப்புத்தகத்தின் பின்னணி திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தீப விவகாரமாகும். கார்த்திகை தீபத்தன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரிய வழக்கில், மதுரை கிளை நீதிபதியாக இருந்த ஜி.ஆர்.சுவாமிநாதன் தீபம் ஏற்றலாம் என்று உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
மேல்முறையீட்டு அமர்வு (நீதிபதிகள் ஜெயசந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன்) கடந்த ஜனவரி 6 ஆம் தேதி தீர்ப்பளித்து, தீபம் ஏற்றலாம் என்று உறுதி செய்தது. அரசின் கவலையான பொது அமைதி பாதிக்கப்படும் என்ற காரணம் நம்பத்தகுந்தது அல்ல என்றும் நீதிபதிகள் கூறினர். பைபிள் வரிகளை மேற்கோள் காட்டியும் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். பொங்கல் விடுமுறை முடிந்த பிறகு மனு தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு கார்த்திகை தீபம் நவம்பர் 24 ஆம் தேதி வருவதால், தீர்ப்பின்படி அன்று தீபம் ஏற்றப்பட வாய்ப்புள்ளது. கோயில் அர்ச்சகர்கள் ஏற்கெனவே கார்த்திகை தீபத்தன்று மட்டுமே தீபம் ஏற்ற வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிபதியின் தீர்ப்பை விமர்சிக்கும் வகையில் புத்தகம் வெளியாவதைத் தடுக்க நீதிமன்றமே உத்தரவிட்டிருப்பது, கருத்து சுதந்திரம் குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது. இவ்வழக்கு முடியும் வரை புத்தகம் விற்பனைக்கு வராது என்று தெரிகிறது.
இதையும் படிங்க: அராஜக திமுக கொட்டம் தேர்தலில் அடக்கப்படும்... மேல்முறையீட்டிலும் தோல்வி தான்... நயினார் உறுதி..!