×
 
☰

கொலை செய்யணுமா..?? இதுதான் நம்பர்..!! சென்னை மாநகர பஸ்சில் ஹிண்ட் கொடுத்த ரவுடி கைது!!

வியாசர்பாடி தாமோதரன் நகரைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்ற 33 வயது ரவுடிதான் இந்த எழுத்தை எழுதியதைக் கண்டுபிடித்தனர்.

சென்னை மாநகரில் ரவுடிகளுக்கு இடையேயான பகை தீவிரமடைந்து வரும் நிலையில், ஒருவர் மற்றொருவரை சட்டத்தின் முன் மாட்டிவிடும் புதிய உத்தியைக் கையாண்ட சம்பவம் வெளியாகியுள்ளது. மாநகரப் பேருந்து ஒன்றின் இருக்கை பின்புறத்தில் “விச்சி வியாசர்பாடி ரவுடி கொலை செய்ய வேண்டுமா? போன் செய்யுங்கள்” என்ற வாசகத்துடன் அவரது செல்போன் எண்ணும் எழுதப்பட்டிருந்தது. இது சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து எம்.கே.பி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

போலீசார் அந்த எண்ணைத் தொடர்பு கொண்டபோது, அது வடசென்னை பகுதியைச் சேர்ந்த விக்கி என்பவரின் எண் என்பது தெரியவந்தது. அவரை அழைத்து விசாரித்ததில், “என் போன் நம்பரை நானே பொது இடத்தில் எழுதிவைக்க மாட்டேன். யாரோ என்னை மாட்டிவிட முயற்சி செய்கிறார்கள்” என அவர் தெரிவித்தார். இதையடுத்து பேருந்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், வியாசர்பாடி தாமோதரன் நகரைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்ற 33 வயது ரவுடிதான் இந்த எழுத்தை எழுதியதைக் கண்டுபிடித்தனர்.

கொடுங்கையூர் முதல் அண்ணா சதுக்கம் வரை இயங்கும் மின்சாரப் பேருந்தில் அவர் இந்தச் செயலைச் செய்திருந்தார். ஜாகீர் உசேன் மீது ஏற்கனவே பத்து வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீசார் அவரை அதிரடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: முன்கூட்டியே நெருங்கும் அர்னாப் புயல்: எண்ணூரில் தடுப்புகளைத் தாண்டி பாயும் கடல் அலைகள்!

சென்னையில் ரவுடிகளுக்கு இடையே பழிவாங்கும் நோக்கில் மாறி மாறி தாக்குதல் மற்றும் கொலை முயற்சிகள் நடைபெறுவது அறியப்பட்ட உண்மை. எதிரிகள் குறித்து போலியான புகார்களை போலீசில் கொடுப்பது, பொது இடங்களில் அவர்களை இழிவுபடுத்தும் செய்திகளைப் பரப்புவது போன்ற வழிகளையும் அவர்கள் கையாள்கின்றனர். இந்தச் சம்பவமும் அத்தகைய போட்டியின் விளைவே என போலீசார் கருதுகின்றனர்.

பேருந்துகளில் இதுபோன்ற தேவையற்ற எழுத்துக்கள் இனி வராமல் தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதுபோன்ற சந்தேகமான செய்திகளைக் கண்டால் உடனடியாக போலீசில் தெரிவிக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். 
 

இதையும் படிங்க: சென்னையை ஒருவழியாக்கும் மழை..!! வேளச்சேரிக்கு வந்திறங்கிய படகுகள்.. தயார் நிலையில் மீட்புப் படை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share