வாலிபர் வயிற்றில் 29 கரண்டிகள், 19 டூத் ப்ரஷ்கள்! ஆபரேஷன் தியேட்டரில் டாக்டர்கள் அதிர்ச்சி!
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஒருவரின் வயிற்றில் 29 கரண்டிகள், 19 டூத் பிரஷ்கள் இருந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரபிரதேசத்தின் காஜியாபாத்தில், போதைப்பொருளுக்கு அடிமையான 35 வயது சச்சின் என்பவருக்கு விசித்திரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ஹபூர் மாவட்டத்தின் புலந்த்ஷாஹர் பகுதியைச் சேர்ந்த இவர், குடும்பத்தினால் மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது, திடீரென அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு அலறி துடித்தார்.
உடனடியாக அருகிலுள்ள தேவானந்தனி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சச்சினை, மருத்துவர்கள் உல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்து பரிசோதித்தனர். அதிர்ச்சிக்குரிய வகையில், அவரது வயிற்றில் 29 ஸ்டீல் கரண்டிகள், 19 பல் பிரஷ்கள் மற்றும் 2 பேனாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சச்சின் உயிர் தப்பினார். சிகிச்சைக்குப் பின் செப். 23 அன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
சச்சின், போதை பொருளின் தாகத்தால் இந்தப் பொருட்களை விழுங்கியதாக மருத்துவமனை அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், அவர் இதற்குக் காரணமாக மையத்தில் வழங்கப்படும் உணவு போதுமானதல்ல எனக் கூறுகிறார்.
இதையும் படிங்க: 19 வயதில் ரூ.1,330 கோடி சொத்து! கிரிப்டோகரன்சியில் கெத்து காட்டும் ட்ரம்ப் மகன்!
"ஒரு நாளுக்கு மிகக் குறைந்த காய்கறிகளும், சில சப்பாத்திகளும் மட்டுமே கிடைக்கும். வீட்டிலிருந்து அனுப்பிய உணவுப் பொருட்கள் பெரும்பாலும் நமக்கு கிடைக்காது. சில நாட்களில் ஒரு பிஸ்கட் மட்டுமே வழங்கப்படும்" என்று அவர் கோபத்தில் கூறியதாக தெரிகிறது.
இதனால், அவர் கோபத்தில் கரண்டிகளை திருடி, குளியலறைக்குச் சென்று உடைத்து, தண்ணீருடன் விழுங்கியதாகவும், பின்னர் பிரஷ்கள், பேனாக்களையும் சேர்த்ததாகவும் கூறப்படுகிறது.
மருத்துவர்கள், "இது உளவியல் சிக்கல்களால் ஏற்படும் பிரச்னை. போதை அடிமையாளர்களுக்கு இது பொதுவானது" என விளக்கினர். முதலில் எண்டோஸ்கோப்பி மூலம் பொருட்களை அகற்ற முயன்றனர், ஆனால் அளவு அதிகமாக இருப்பதால் அறுவை சிகிச்சை தேவைப்பட்டது.
இந்த சம்பவம், மறுவாழ்வு மையங்களில் உணவு, சுகாதாரம் மற்றும் உளவியல் ஆதரவு போதுமானதாக இல்லையென்பதை வெளிப்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் இந்தச் செய்தி பரவி, மையங்களின் நிலைமை குறித்த விவாதத்தைத் தூண்டியுள்ளது.
இதையும் படிங்க: ரூ.23 கோடியில் சுரங்கத்துறை அலுவலகம்... தலைமைச் செயலகத்தில் இருந்து தொடங்கி வைத்த முதல்வர்...!