×
 

சிவகங்கை அருகே கோர விபத்து: பள்ளி வேன்–லாரி நேருக்கு நேர் மோதல்; டிரைவர் பலி, 9 மாணவர்கள் காயம்!

சிவகங்கை அருகே சக்கந்தியில் பள்ளி வேன், லாரியும் மோதியதில் வேன் டிரைவர் பலியானார். மாணவர்கள் 9 பேர் காயம் அடைந்தனர்.

சிவகங்கை அருகே பள்ளி வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்தில் பள்ளி வேன் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். வேனில் பயணம் செய்த 9 மாணவ, மாணவியர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் அருகே தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அரசு விடுமுறை நாளான இன்று பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதற்காக மாணவ, மாணவியர்கள் பள்ளி வேன்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சிவகங்கை பகுதியைச் சேர்ந்த 9 மாணவ, மாணவியர்களை ஏற்றிக்கொண்டு பள்ளி வேன் இடையமேலூர் நோக்கி சென்றுள்ளது. வேனை சிவகங்கை வேலாயுதசாமி கோவில் தெருவைச் சேர்ந்த எத்திராஜ் (65) ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது. வேனில் தமறாக்கியைச் சேர்ந்த வேலுச்சாமி நடத்துனராக இருந்துள்ளார்.

இதையும் படிங்க: 11,500 குழந்தைகளுக்கு இப்போவே ரெடி! தாய்மாமன் தங்க மோதிர திட்டம்! தயாராகிறது தகுதியானோர் லிஸ்ட்!

வேன் கோமாளிபட்டி விளக்கு அருகே சென்றபோது, கோமாளிபட்டியில் செயல்பட்டு வரும் கனிம நிறுவனத்திற்கு செல்வதற்காக லாரி ஒன்று திரும்பியதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக பள்ளி வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதியதாக தெரிகிறது. மோதலின் வேகத்தில் வேன் லாரியுடன் இழுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் எத்திராஜ் பலத்த காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்டார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் வேனில் பயணம் செய்த 5 மற்றும் 6-ம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் உட்பட 9 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து சிவகங்கை நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி விடுமுறை நாளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், விபத்துக்கான முழுமையான காரணம் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் விதிமுறை பின்பற்றல் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: முதல்வர் விஜய் பாதுகாப்புப் பணியில் திடீர் பரபரப்பு! 2 போலீஸ் அதிகாரிகள் மயங்கி விழுந்ததால் அதிர்ச்சி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share