ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடுகிறதா தமிழக அரசு..?? ரூ.20,000 கோடி திட்டம் நிறுத்தம்?
தமிழக மின்வாரியத்தில் அடுத்தடுத்து ஊழல் புகார்கள் வெளிவரும் நிலையில், தற்போது ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக மின்வாரியத்தின் வரலாற்றில் மிகப் பெரிய அளவிலான ஒரு திட்டம் தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. முந்தைய தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஸ்மார்ட் மீட்டர் திட்டம், தற்போதைய அரசால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படலாம் என்கிற தகவல் மின் வாரிய வட்டாரங்கள் மற்றும் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மின்சார நுகர்வை கணக்கிடுவதில் பாரம்பரிய முறையான, ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று மீட்டர் படிப்பதற்கு பதிலாக, தானியங்கி முறையில் செயல்படும் ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கம். இதன் மூலம் மின் இழப்பு குறைப்பு, துல்லியமான கணக்கீடு, நுகர்வோருக்கு உடனடி பில் தகவல்கள் போன்ற பல நன்மைகள் குறிப்பிடப்பட்டன. தமிழகம் முழுவதும் சுமார் 3.04 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவ திட்டமிடப்பட்டிருந்தது. இந்த மாபெரும் திட்டத்திற்கு சுமார் 20,000 கோடி ரூபாய் செலவு செய்யப்படும் என மதிப்பிடப்பட்டது.
திட்டம் ஆறு தொகுப்புகளாகப் பிரிக்கப்பட்டு டெண்டர் விடுக்கப்பட்ட நிலையில், சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, மின்வாரியத்தில் பல்வேறு கொள்முதல் மற்றும் ஒப்பந்தங்களில் ஊழல் புகார்கள் அடுத்தடுத்து எழுந்து வரும் சூழலில், இந்தப் பிரம்மாண்ட திட்டத்தைத் தொடர்வது மேலும் சர்ச்சைகளை ஏற்படுத்தும் என அரசு தரப்பு கருதுவதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கே.என்.நேரு மீது எஃப்ஐஆர் பதியப்பட்டது எப்படி? சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி!
மின் ஊழியர் சங்கங்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புகள் இதுகுறித்து கவலை தெரிவித்துள்ளன. குறிப்பாக, ஸ்மார்ட் மீட்டர்கள் மூலம் மின் கட்டணம் மேலும் உயரக்கூடும் என நுகர்வோர் அமைப்புகள் தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தன. ஏற்கனவே தமிழக மின்வாரியம் (TANGEDCO) கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்தப் பெரிய தொகை திட்டத்தை உடனடியாக செயல்படுத்துவதற்கு பதிலாக, தற்போதைக்கு நிறுத்தி வைத்து மறுபரிசீலனை செய்வதே சரியான முடிவு என அரசு வட்டாரங்கள் ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.
ஸ்மார்ட் மீட்டர் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், மின் திருட்டு கணிசமாகக் குறையும், பில் தயாரிப்பில் தாமதம் தவிர்க்கப்படும், மின் நுகர்வு பற்றிய தரவுகள் உடனுக்குடன் கிடைக்கும் என்பது ஆதரவாளர்களின் வாதம். ஆனால், மீட்டர் பொருத்தலுக்கான செலவு இறுதியில் நுகர்வோரின் மின் கட்டணத்தில் பிரதிபலிக்கும் என்பது எதிர்ப்பாளர்களின் முக்கிய குற்றச்சாட்டு. இந்த திட்டத்தின் எதிர்காலம் குறித்த இறுதி முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் மின் துறையில் இந்த முடிவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
இதையும் படிங்க: தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!