ஓயாத பிரச்சனை... குதிரை பேரம்..! ஆளுநரிடம் மனுக் கொடுத்து முறையிட்ட அதிமுக.!
குதிரை பேரம் தொடர்பாக ஆளுநரிடம் அதிமுக மனு கொடுத்துள்ளது.
தமிழக அரசியலில் குதிரை பேரம் தொடர்பான குற்றச்சாட்டுகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. சமீபத்தில் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களுக்கு முன்பும் பின்பும் பல அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நிகழ்வுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. இந்தப் பின்னணியில், அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி கடும் ஆவேசத்துடன் பேசியுள்ளார்.ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மூத்த அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, அதிமுகவிலிருந்து மேலும் சுமார் பதினைந்து சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேற வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கருத்து அதிமுக தரப்பில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதைக் குதிரை பேரத்தை ஊக்குவிக்கும் வகையிலான பேச்சாகக் கருதிய அதிமுக, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முடிவு செய்தது.இதன் தொடர்ச்சியாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வழிகாட்டுதலின்படி, கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான குழுவினர் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேரில் சந்தித்தனர். அப்போது அவர்கள் ஒரு விரிவான புகார் மனுவை அளித்தனர்.
அந்த மனுவில், ஏற்கனவே அதிமுகவைச் சேர்ந்த ஆறு சட்டமன்ற உறுப்பினர்களைப் பல கோடி ரூபாய்க்கு விலைபேசி வாங்கி, அவர்களை ராஜினாமா செய்ய வைத்து, இடைத்தேர்தலைக் கொண்டுவந்து மீண்டும் போட்டியிடச் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சிப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆளுநரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தமிழகத்தில் குதிரை பேரம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது எனக் கடுமையாகச் சாடினார்.
இதையும் படிங்க: நாங்க ரெடி..!! அதிமுக புத்துணர்ச்சி பெறும்..! சி. வி. சண்முகம் உறுதி.!
மூத்த அமைச்சர் செங்கோட்டையன் பேசியதே இதற்குச் சான்று என அவர் சுட்டிக்காட்டினார். குதிரை பேரத்தைப் பற்றிப் பேசும் அமைச்சர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அரசமைப்புச் சட்டத்தின்படி ஆளுநருக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த நடைமுறையைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: செங்கோட்டையன் பேச்சால் சர்ச்சை! ஆளுநரை சந்திக்கிறார் அதிமுக கொறடா? தமிழக அரசியலில் திடீர் திருப்பம்!