சாலமன் பாப்பையாவின் கடைசி ஆசை..! உருக்கமான உயில்... நாளை உடல் தகனம்..!!
சாலமன் பாப்பையாவின் உடல் நாளை தகனம் செய்யப்பட உள்ளது.
தமிழறிஞர், பட்டிமன்ற நடுவர் மற்றும் பேராசிரியர் சாலமன் பாப்பையா இன்று காலமானார். வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 90. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியில் 1936ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி பிறந்த சாலமன் பாப்பையா, எளிய குடும்பத்தில் வளர்ந்தவர்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி, பின்னர் துறைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். தமிழ் இலக்கியத்தை எளிய மொழியில் மக்களிடம் கொண்டு சேர்த்ததில் அவர் தனித்துவமான பங்காற்றினார். திருக்குறள் மற்றும் கம்பராமாயணம் உள்ளிட்ட செவ்வியல் நூல்களுக்கு எளிய தமிழில் உரை எழுதியவர். பட்டிமன்றங்களில் நடுவராகவும் பேச்சாளராகவும் ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், தொலைக்காட்சி வழியாகத் தமிழ்நாடு முழுவதும் பிரபலமானார்.
சமூகப் பிரச்சினைகள், இலக்கிய விவாதங்கள், அன்றாட வாழ்க்கைச் சிக்கல்கள் ஆகியவற்றை நகைச்சுவையுடன் கலந்து, எல்லோருக்கும் புரியும் வகையில் வழங்கினார். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல ஆயிரம் பட்டிமன்றங்களை நடத்தி, தமிழை உலக அரங்கில் பரப்பிய பெருமைக்குரியவர். கலைமாமணி, பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றார். சில திரைப்படங்களிலும் சிறு வேடங்களில் நடித்துள்ளார். அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகத்திலும் பட்டிமன்ற வட்டாரத்திலும் பெரும் இழப்பாக உணரப்படுகிறது. பாரதி பாஸ்கர் உள்ளிட்ட பல பேச்சாளர்கள் தங்கள் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழுக்கு பேரிழப்பு..! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்.!
தமிழ் மொழிக்கும் மக்களுக்கும் அவர் ஆற்றிய தொண்டு என்றும் நினைவுகூரப்படும். சாலமன் பாப்பையாவின் உடல் மதுரையில் உள்ள ஆரப்பாளையத்தில் அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை செப்டம்பர் 12ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணிக்குள் அவரது உடல் தத்தனேரியில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. தனது உடலைத் தகனம் செய்ய வேண்டும் என அவர் உயிலில் எழுதி வைத்திருந்தார். குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அவரது இறுதி யாத்திரையில் பங்கேற்க உள்ளனர்.
இதையும் படிங்க: தமிழுக்கு பேரிழப்பு..! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்.!