×
 

வந்தே மாதரம் பாடல் அவமதிப்பு?! சோனியா காந்தி மீது போலீசில் புகார்! 3 ஆண்டு சிறை வரை தண்டனை?

தேசிய பாடலான 'வந்தே மாதரம்' இசைக்கப்பட்டபோது பாதியிலேயே நிறுத்தச் சொல்லி சைகை காண்பித்ததாக காங்கிரஸ் பார்லி., குழு தலைவர் சோனியா மீது, கர்நாடக போலீசில் பா.ஜ., சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘வந்தே மாதரம்’ பாடல் இசைக்கப்பட்டபோது சோனியா காந்தி சைகை செய்த விவகாரம் பெரும் அரசியல் சர்ச்சையாக வெடித்துள்ளது.

பாடலை பாதியிலேயே நிறுத்தும்படி சோனியா காந்தி சைகை செய்ததாக பா.ஜ.க. குற்றம்சாட்டியுள்ள நிலையில், காங்கிரஸ் தரப்பு இதை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள உர்வா காவல் நிலையத்தில் பா.ஜ.க. சார்பில் சோனியா காந்திக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு அவமரியாதை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டியுள்ள பா.ஜ.க. நிர்வாகிகள், தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.

இதையும் படிங்க: ‘உங்க விஜய் நா வரேன்’ இந்தியா - பாக்., எல்லையில் திடீரென ஒலித்த தவெக பாடல்! வைரலாகும் வீடியோ

சுதந்திர தினத்தன்று காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேசியக்கொடி ஏற்றுவதற்கு முன்பு ‘வந்தே மாதரம்’ பாடல் இசைக்கப்பட்டது.

அப்போது சோனியா காந்தி மற்றும் கார்கே இடையே நடந்த சைகைகள் வீடியோவில் பதிவாகியதாக கூறப்படுகிறது. இதை சுட்டிக்காட்டிய பா.ஜ.க., பாடலை நிறுத்தச் சொல்லும் வகையில் சோனியா சைகை செய்ததாக விமர்சித்துள்ளது.

ஆனால் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இதற்கு வேறுபட்ட விளக்கம் அளித்துள்ளார். நீண்ட நேரமாக நின்றுகொண்டிருந்த கார்கேவுக்கு நாற்காலி கொண்டு வருமாறு சோனியா சைகை செய்ததாகவும், அதை பா.ஜ.க. தவறாக புரிந்துகொண்டு அரசியல் பிரச்னையாக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த விவகாரத்தில் காங்கிரசை கடுமையாக விமர்சித்துள்ளார். சுதந்திரப் போராட்ட தியாகிகளின் உணர்வுகளுடன் தொடர்புடைய ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்துக்காக காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

‘வந்தே மாதரம்’ பாடலை இயற்றிய பங்கிம் சந்திர சட்டர்ஜியின் குடும்பத்தைச் சேர்ந்த சுமித்ரோ சட்டர்ஜியும் இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தேசிய பாடலுக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே ‘வந்தே மாதரம்’ தொடர்பான சட்டப் பாதுகாப்பும் அரசியல் விவாதத்தின் மையமாகியுள்ளது. 2026-ம் ஆண்டு திருத்தச் சட்டத்தின் மூலம் தேசிய பாடலுக்கு சட்டப் பாதுகாப்பு விரிவுபடுத்தப்பட்டு, குறிப்பிட்ட வகையான அவமதிப்பு அல்லது பாடலைத் தடுக்க முயற்சிப்பது குற்றமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சோனியா காந்திக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள புகாரில் போலீசார் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பது அடுத்த கட்டத்தில் கவனம் பெறுகிறது.

இந்த விவகாரம் தற்போது பா.ஜ.க.–காங்கிரஸ் இடையிலான புதிய அரசியல் மோதலாக மாறியுள்ள நிலையில், வீடியோவில் பதிவான சைகையின் உண்மையான நோக்கம் குறித்து விசாரணையில் என்ன தெரியவரும் என்பதே முக்கிய கேள்வியாக உள்ளது.

இதையும் படிங்க: காங்., அலுவலகத்தில் முழு ‘வந்தே மாதரம்’ பாடல்! பொறுமை இழந்த சோனியா காந்தி! ராகுல், கார்கே ரியாக்ஷன் வைரல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share