மாமல்லபுரத்தில் தென்மண்டல கவுன்சில் மாநாடு! துணை தலைவராக முதல்வர் விஜய் அறிவிப்பு!
மாமல்லபுரத்தில் நாளை நடைபெறும் தென்மண்டல கவுன்சில் மாநாட்டின் துணைத் தலைவராகத் தமிழ்நாடு முதல்வர் விஜய் அறிவிக்கப்பட்டுள்ளார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள கோவளத்தில், மத்திய-மாநில அரசுகளின் உறவை மேம்படுத்துவதற்கான 31-வது தென்னக மண்டலக் குழு (Southern Zonal Council) மாநாடு நாளை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த உயர்மட்ட மாநாட்டிற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்குகிறார்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் செயலகம் மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் இம்மாநாட்டில், சுழற்சி முறை விதிகளின்படி மாநாட்டை நடத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தென் மண்டலக் குழுவின் துணைத் தலைவராகச் செயல்படுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தெலங்கானா ஆகிய தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள், புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள்/நிர்வாகிகள் மற்றும் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் தலா இரு மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அரசு அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
இதையும் படிங்க: நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கும் அமித் ஷா..!! எதிர்க்கட்சிகளுக்கு கிரண் ரிஜிஜு வைத்த வேண்டுகோள் என்ன..??
மாநிலங்களுக்கான மத்திய நிதிப் பங்கீடு, தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான நிலைப்பாடுகள், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்சினைகள், உள்கட்டமைப்பு மேம்பாடு, கடலோரப் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொதுவான விவகாரங்கள் குறித்து இம்மாநாட்டில் விரிவாக ஆலோசிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: "மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை!" - திருவண்ணாமலையில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை!