×
 

வேளாங்கண்ணி திருவிழா: தாம்பரம் - வேளாங்கண்ணி இடையே சிறப்பு வாராந்திர ரயில்கள் இயக்கம்!

வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி தாம்பரம் - வேளாங்கண்ணி இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

உலகப் பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயப் பெருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் கூடுதல் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் தாம்பரம் - வேளாங்கண்ணி இடையே சிறப்பு வாராந்திர விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகத் தெற்கு ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, தாம்பரம் - வேளாங்கண்ணி சிறப்பு ரயில் (வண்டி எண்: 06037) வரும் ஆகஸ்ட் 24, 31 மற்றும் செப்டம்பர் 7 ஆகிய திங்கட்கிழமைகளில் இரவு 11:50 மணிக்குத் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7:45 மணிக்கு வேளாங்கண்ணியைச் சென்றடையும். மறுமார்க்கமாக, வேளாங்கண்ணி - தாம்பரம் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06038) ஆகஸ்ட் 26, செப்டம்பர் 2 மற்றும் 9 ஆகிய புதன்கிழமைகளில் அதிகாலை 12:45 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு, அதேநாள் காலை 7:30 மணிக்குத் தாம்பரத்தை வந்தடையும்.

இந்தச் சிறப்பு ரயில்கள் இரு மார்க்கங்களிலும் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், மயிலாடுதுறை, திருநள்ளாறு, காரைக்கால், நாகூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இதையும் படிங்க: SBI வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்!

பயணிகளின் வசதிக்காக இந்த ரயில்களில் 8 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் (Sleeper Class), 11 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் (General Second Class) மற்றும் 2 மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள் கொண்ட லக்கேஜ் பிரேக் வேன் பெட்டிகள் என மொத்தம் 21 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இச்சிறப்பு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பள்ளிகளில் புகையிலை பொருள் தடுப்பு! தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை முக்கிய உத்தரவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share