×
 

இன்று தென்மண்டல முதல்வர்கள் மாநாடு.. அரசியல் முதல் மாநில பிரச்சினைகள் வரை என்ன பேசப்படும்?

மாநிலங்களுக்கிடையேயான சர்ச்சைகளைத் தீர்க்கவும், மத்திய-மாநில உறவை வலுப்படுத்தவும் இந்த குழு ஒரு முக்கிய மேடையாகச் செயல்படுகிறது.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் இன்று சென்னை அருகே கோவளத்தில் ஒன்றுகூடுகின்றனர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்படும் 31வது தென் மண்டலக் குழு (Southern Zonal Council) மாநாடு, மாமல்லபுரம் அருகே உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது. 

கடைசியாக 2022ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற இந்த ஆண்டுதோறும் நடத்தப்படும் கூட்டம், இப்போது தமிழ்நாடு அரசின் விருந்தோம்பலில் மீண்டும் தொடங்குகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்குகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் துணைத் தலைவராக செயல்படுகிறார். 

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொள்கின்றனர். நேற்று இரவு சென்னை விமான நிலையம் வந்த அமித் ஷாவுக்கு பாஜக தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கோவளம் சென்ற அவரை முதலமைச்சர் விஜய் வரவேற்றார். 

இதையும் படிங்க: ஓணம் ஸ்பெஷல்.. கேரள அரசு மதுபான ஊழியர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1.05 லட்சம் போனஸாம்..!!

இரவு விருந்தில் பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் தென் மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீட்டுப் பங்கீடு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான கூட்டுறவை மேம்படுத்துவது ஆகும். நீர்வளப் பகிர்வு, கல்வி, சுகாதாரம், பேரிடர் மேலாண்மை, தொழில்நுட்பம், எல்லை விவகாரங்கள், குற்றத் தடுப்பு மற்றும் சட்ட அமலாக்க ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெறும்.

மாநிலங்களுக்கிடையேயான சர்ச்சைகளைத் தீர்க்கவும், மத்திய-மாநில உறவை வலுப்படுத்தவும் இந்த குழு ஒரு முக்கிய மேடையாகச் செயல்படுகிறது. அதன் பரிந்துரைகள் ஆலோசனைத் தன்மை கொண்டவை. தமிழ்நாடு-கர்நாடகா இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணைத் திட்டம் தொடர்பான பிரச்சினைகள் தற்போது மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அண்மையில் கர்நாடகாவில் தமிழர்கள் மூன்று பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் இரு மாநில உறவில் சில பதட்டங்களை உருவாக்கியுள்ள நிலையில், இரு மாநில முதலமைச்சர்களும் ஒரே மேடையில் சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்லத் திட்டமிட்டிருந்தபோது, சூழல் சரியில்லை எனக் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்திருந்தார். இருப்பினும் இப்போது அவர் இங்கு வந்திருப்பதால், இருவரும் தனியாகச் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாடு தென்னக மாநிலங்களின் பொதுவான நலன்களை முன்னிலைப்படுத்தி, பிராந்திய ஒற்றுமையை வலுப்படுத்தும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஹார்முஸ் அமெரிக்காவுக்கா? கலிபோர்னியா ஈரானுக்கா? டிரம்புக்கு அதிரடி பதிலடி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share