×
 

தமிழக சட்டசபையில் 3-ம் நாள் பரபரப்பு: சவுமியா அன்புமணிக்கு நீர்வளத்துறை அமைச்சர் பதிலடி!

ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரும் திட்டங்கள் தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று சவுமியா அன்புமணி கூறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27ஆம் ஆண்டு பொதுப் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் மூன்றாவது நாளாக தொடர்ந்தது. ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தினருக்கும் எதிர்க்கட்சியான திமுகவினருக்கும் இடையே காரசாரமான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

விவாதத்தின் போது தவெக எம்.எல்.ஏ. சுகுமார், “திமுகவினர் வருமானவரித் துறையும் அமலாக்கத் துறையும் வந்துவிடுமோ என்று அஞ்சுகின்றனர்” என்று குறிப்பிட்டார். இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்கையில், “நீர்வளத்துறை அமைச்சரும் டென்ஷனில் இருக்கிறார்; அவருக்கும் சி.பி.ஐ. வழக்குகள் உள்ளன” என்று தாக்குதல் தொடுத்தார். 

சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தலையிட்டு, “வார்த்தைகள் மற்றவரைப் புண்படுத்தாத வகையில் இருக்க வேண்டும்” என சுகுமாருக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து பேசிய பாமக எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி ராமதாஸ், பாமகவின் 13 ஆண்டுகால கோரிக்கையான சேவை உரிமைச் சட்டத்தை அமல்படுத்திய தவெக அரசுக்கு வாழ்த்து தெரிவித்தார். பிறப்பு, இறப்பு உள்ளிட்ட சான்றுகளை விரைவாக வழங்கும் இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததற்கும், நம்மாழ்வார் பெயரில் உயிர்ம வேளாண் கல்லூரி தொடங்குவதற்கும் நன்றி தெரிவித்தார்.

இதையும் படிங்க: காவிரி நீரை பெறுவதில் சவால்..! சமரசமே கிடையாது... பேரவையில் அமைச்சர் ஆனந்த் திட்டவட்டம்..!!

அதேநேரம், பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யாததும், கால்நடை, பால்வளம், நீர்ப்பாசனம் உள்ளிட்ட துறைகளுக்கு மிகக் குறைவான நிதி ஒதுக்கப்பட்டதும் ஏமாற்றமளிப்பதாகக் குறிப்பிட்டார். ஐந்து கோடி விவசாய மக்களுக்கு வெறும் ரூ.14 ஆயிரம் கோடி ஒதுக்கீடு போதாது என்றும், “வீட்டில் பெண்கள் பட்ஜெட் போடும்போது சாப்பாட்டுக்கு நிதி ஒதுக்காமல் இருப்பார்களா?” என்றும் கேள்வி எழுப்பினார்.

ஆறுகள் இணைப்பு, தடுப்பணைகள் கட்டுதல் உள்ளிட்ட நீர்ப்பாசனத் திட்டங்களுக்குக் கூடுதல் நிதி தேவை என்றும், 10 கி.மீ. இடைவெளியில் தடுப்பணைகள் அமைத்தால் 100 டி.எம்.சி. நீர் சேமிக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார். மாநிலத்தில் உள்ள 27 ஆயிரம் குளங்களைத் தூர்வாரினால் 150 டி.எம்.சி. வரை நீர் சேமிக்க முடியும் எனவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் திட்டங்கள் இல்லாதது குறித்தும் கவலை தெரிவித்தார். வேலைவாய்ப்பு அறிவிப்புகள் இல்லாததையும், தனியார் துறையில் உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, தருமபுரியில் காவிரி உபரிநீர் திட்டத்தைச் செயல்படுத்தக் கோரினார்.

நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் பதிலளிக்கையில், முந்தைய ஆண்டுகளை விடக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தருமபுரி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை முதலமைச்சருடன் கலந்தாலோசித்து நிறைவேற்றுவதாகவும் உறுதியளித்தார். கால்நடைத்துறை அமைச்சர் கமலியும் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் தேவையான அனைத்தும் செய்து தரப்படும் என உத்தரவாதம் அளித்தார்.
 

இதையும் படிங்க: வெள்ள அபாயத்தை தடுக்க அதிரடி நடவடிக்கை..! நீர்நிலைகள் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்த அமைச்சர் ஆனந்த்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share