தவெகவா..? திமுகவா..? அதிமுகவை கைகழுவும் வேலுமணி..? முக்கிய ஆலோசனை..!
அதிமுகவில் இருந்து விலகும் முடிவை எஸ். பி. வேலுமணி எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசியலில் அதிமுகவின் உள் பூசல்கள் புதிதல்ல. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சி தொடர்ச்சியான பிளவுகளைச் சந்தித்து வருகிறது. அந்த வரிசையில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் தரப்பு ஏற்படுத்திய அதிர்வுகள் குறிப்பிடத்தக்கவை. எடப்பாடி பழனிச்சாமியுடன் மோதல், தமிழக வெற்றி கழகம் அரசுக்கு ஆதரவு, மீண்டும் இணைதல் மற்றும் தற்போதைய அதிருப்தி வரை நீண்ட இந்தச் சம்பவங்கள் தமிழக அரசியலை பெரிதும் பாதித்துள்ளன.
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பெரிய தோல்வியைச் சந்தித்தது. தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, விஜய் தலைமையில் அரசு அமைத்தது. இந்தத் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் உள் மோதல் தீவிரமடைந்தது. எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான ஒரு பெரிய பிரிவு, ஈபிஎஸ் தலைமையை கேள்வி கேட்டது.
மே 13 அன்று தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றபோது உச்சகட்ட சம்பவம் அரங்கேறியது. வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். வேலுமணி சபையில் பேசி, தங்கள் பிரிவு அரசுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தார். இதனால் அதிமுகவினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த நடவடிக்கையை ஈபிஎஸ் தரப்பு கடும் எதிர்ப்புடன் பார்த்தது. அதிமுக பொதுச் செயலாளராக ஈபிஎஸ், வேலுமணி உள்ளிட்ட 25 எம்எல்ஏக்களைத் தகுதி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகருக்கு மனு அனுப்பினார்.
இதையும் படிங்க: அப்போதே தடுத்தேன்! எடப்பாடி கேக்கல!! மீண்டும் போர்க்கொடி தூக்கிய எஸ்.பி வேலுமணி! அதிமுகவில் பரபரப்பு!
மறுபுறம், வேலுமணி தரப்பும் எதிர் மனுக்களைத் தாக்கல் செய்தது. கட்சி இரு பிரிவுகளாக உறுதியாகப் பிரிந்தது போல் தோன்றியது. இந்தப் பிளவு நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. மே மாத இறுதியில், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைக்கு வந்தனர். வேலுமணி, “எடப்பாடி பழனிச்சாமிதான் எங்கள் பொதுச் செயலாளர். கட்சியில் பிளவு இல்லை, கருத்து வேறுபாடு மட்டுமே” என்று அறிவித்தார்.
இருப்பினும் மாவட்ட செயலாளர் பதவி அதிமுகவில் இருந்து பறிக்கப்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கட்சியை விட்டு விலக முடிவு எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள ஆதரவாளர்களை சந்தித்து எஸ்.பி. வேலுமணி ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகம் திமுக என இரு கட்சினரும் வேலுமணியிடம் பேசி வருவதாக தகவல் ஆகி இருக்கிறது. மாவட்டச் செயலாளர் பதவி அளிக்காத பட்சத்தில் அதிமுகவை விட்டு விலக முடிவு எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
இதையும் படிங்க: ஆயிரம் பேர் முன்னாடி இப்படியொரு அவமானமா?... கூனி குறுகிப்போன எஸ்.பி.வேலுமணி... முகத்திற்கு நேராக இபிஎஸ் செய்த காரியம்...!