அடுத்த வாரம் சூரசம்ஹாரம்..!! திருச்செந்தூருக்கு போலாமா மக்களே..!! ஸ்பெஷல் பஸ் அறிவித்த TNSTC..!!
திருச்செந்தூர் சூரசம்ஹாரத்திற்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான கந்த சஷ்டி விழாவின் உச்சப் புள்ளியான சூரசம்ஹார உற்சவத்தை அனுபவிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறும் இந்த மிகப்பெரிய உற்சவத்திற்கு முன்னதாகவே, பக்தர்களின் வசதியை முன்னிட்டு அரசு விரைவு போக்குவரத்து கழகம் (TNSTC) சிறப்பு பேருந்து சேவைகளை அறிவித்துள்ளது.
அதன்படி, வரும் திங்கள் (அக். 27) அன்று சூரசம்ஹாரத்தை முன்னிட்டு ஞாயிறு அன்று சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. இதனடிப்படையில் வரும் அக். 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து திருச்செந்தூருக்கு மற்றும் திருச்செந்தூரில் இருந்து அக். 27ஆம் தேதி அன்று சென்னை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இதையும் படிங்க: தசரா, திருப்பதி பிரம்மோற்சவம் ஸ்பெஷல்.. பக்தர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!
திருச்செந்தூர் சூரசம்ஹாரம், முருகப்பெருமானின் புராணக் கதையை வடிவமைக்கும் உற்சவமாகும். இது தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை பகுதியில் உள்ள இந்த சிறிய ஊரை உலக அளவில் பிரபலமாக்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு நடைபெறும் இந்த விழா, பக்தர்களின் பெரும் கூட்டத்தால் பரபரப்பானதாக மாறும். கடந்த ஆண்டுகளில் போக்குவரத்து நெரிசலால் பக்தர்கள் சிரமப்படுவதைத் தவிர்க்க, TNSTC எப்போதும் சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்கிறது. இந்த முறை, பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், கழகம் முன்கூட்டியே திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆண்டு போலவே இம்முறை 500க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அக். 27ஆம் தேதி நடைபெறும் திருச்செந்தூர் சூரசம்ஹாரத்திற்கு செல்லும் பக்தர்கள் http://tnstc.in, tnstc செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் எனவே, பயணிகள் இந்த வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த அறிவிப்பு பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான பேருந்துகளுடன் சேர்ந்து இந்த சிறப்பு சேவை, சுமார் 20 ஆயிரம் பக்தர்களைத் திருச்செந்தூர் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூரசம்ஹாரத்தின் சிறப்பு, தமிழக பக்தர்களின் உற்சாகத்துடன் இந்த ஆண்டும் பிரமாண்டமாக நடைபெறும் என்பது உறுதி.
இதையும் படிங்க: நெருங்கும் தீபாவளி..! காத்து வாங்கும் சென்னை..!! 2 நாளில் இத்தனை லட்சம் பேர் பயணமா..!!