வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கணுமா? தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் அறிவிப்பு!
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்களை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம்கள் வரும் 27-ஆம் தேதி முதல் தொடங்குகின்றன.
தமிழகத்தின் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நான்கு நாட்கள் நடைபெறும் இந்த முகாம்களில் பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து வாக்காளர் பட்டியலில் உரிய மாற்றங்களைச் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலைச் சீரமைப்பதற்கான சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கடந்த 19.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பட்டியலில் பெயர்களைச் சேர்க்கவும், நீக்கவும் அல்லது திருத்தங்கள் செய்யவும் வரும் ஜனவரி 18-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பைப் பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
இந்தச் சிறப்பு முகாம்கள் வரும் 27.12.2025 (சனிக்கிழமை), 28.12.2025 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் ஜனவரி மாதத்தின் முதல் வார இறுதியான 03.01.2026 (சனிக்கிழமை), 04.01.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் நடைபெறும். 18 வயது நிரம்பிய தகுதியுள்ள குடிமக்கள் மற்றும் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் படிவம்-6 ஐப் பூர்த்தி செய்து வழங்கிப் பெயரைச் சேர்த்துக்கொள்ளலாம். அதேபோல், முகவரி மாற்றம், பெயர் திருத்தம் அல்லது புதிய அடையாள அட்டை பெற விரும்புவோர் படிவம்-8 மூலமாகவும், பெயரை நீக்கம் செய்ய விரும்புவோர் படிவம்-7 மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
இதையும் படிங்க: “97 லட்சம் பெயர் நீக்கம்” – முதல்வர் தலைமையில் இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
சிறப்பு முகாம்கள் எவ்விதத் தொய்வுமின்றி நடைபெறுவதை உறுதி செய்ய அனைத்து மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கும் விரிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். ஜனநாயகக் கடமையாற்றத் தகுதியுள்ள குடிமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்கள் விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் வசதி நடைமுறையில் இருந்தாலும், நேரில் விண்ணப்பிக்க விரும்புவோருக்கு இந்த முகாம்கள் மிகவும் பயனுள்ளதாக அமையும்.
இதையும் படிங்க: SIR பணிகளுக்கு பின் வந்த அதிர்ச்சி தகவல்..!! 2 நாள் சிறப்பு முகாம்..!! மிஸ் பண்ணிடாதீங்க சென்னை மக்களே..!!