×
 

ஊரில் கல்யாணமாம் மாரில் சந்தனமாம்… முதல்வர் பேசும் பேச்சா இது? பேரவையில் காரசார விவாதம்…!

கரூர் சம்பவம் குறித்து பேரவையில் முதல்வர் விளக்கம் அளித்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தார்.

கரூர் சம்பவம் தொடர்பாக முதலமைச்ச ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார். தொடர்ந்து கூட்டணிக்காக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்திருந்தார். அதற்கு பதிலடி கொடுத்து அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பேசினார். நாங்கள் கூட்டணிக்காக பேசவில்லை என எதிர்கட்சி தலைவர் ஆவேசமாக கூறினார். கூட்டணி என முதலமைச்சரின் விமர்சிப்பது அரசியல் உள்நோக்கம் கற்பிக்கும் செயல் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

பூஜ்ஜிய நேரத்தில் முதலில் எதிர்க்கட்சி தலைவருக்கு பேச வாய்ப்பு தராமல் முதல்வரை பேச அனுமதி அளித்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சித் தலைவர் கேள்விகளை எழுப்பிய பின் தான் முதலமைச்சர் பேசுவதற்கான அனுமதி அளிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் முன்னதாகவே விளக்கம் அளித்தது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். முழுமையான பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தால் கரூர் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு இருக்கும் என்றும் கூறிய இபிஎஸ், விஜய் நான்கு இடங்களில் பிரச்சாரம் செய்திருந்தார் அதை வைத்து கணித்திருந்தால் கரூருக்கு எத்தனை பேர் வருவார்கள் என்று தெரிந்திருக்கும் என தெரிவித்தார்.

 கரூர் கூட்டத்தில் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாக முதலமைச்சர் கூறுவதாகவும், கரூர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்கள் எண்ணிக்கையில் முதல்வர் மற்றும் ஏடிஜிபி தகவலில் முரண்பாடு இருப்பதாகவும் குறிப்பிட்டார். கரூர் பிரச்சாரத்திற்கு இடம் ஒதுக்கப்பட்டதில் உள்நோக்கம் இருப்பதாக மக்கள் நினைப்பதாக கூறிய எடப்பாடி பழனிச்சாமி, வேலுச்சாமிபுரத்தை ஒதுக்கியது பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறினார். ஊரில் கல்யாணமாம் மாரில் சந்தனமாம் என்ற பழமொழியை சொல்லி முதலமைச்சர் விமர்சித்த நிலையில் கூட்டணிக்கு ஆள் தேடுவதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

இதையும் படிங்க: ப்ளீஸ் அவசரப்படாதீங்க... சாதி பெயர் நீக்கும் விவகாரத்தில் தலையிட்ட ராமதாஸ்...!

முதலமைச்சர் பேசியது கண்டனத்திற்கு உரியது என்றும் அவை பேச்சில் இருந்து அதனை நீக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தினார். அதனை நீக்குவதாக சபாநாயகர் கூறிய நிலையில், நீக்க வேண்டாம் என்று முதலமைச்சர் கூறியதாக தெரிகிறது. தொடர்ந்து, நள்ளிரவில் பரிசோதனை நடைபெற்றது ஏன் என்றும் என்ன அவசரம் எனவும் எடப்பாடி பழனிச்சாமி அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தார். பேரவையில் கரூர் சம்பவம் தொடர்பாக காரசார விவாதம் நடந்து வரும் நிலையில் திமுகவினர் மற்றும் அதிமுகவினர் இடையே கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இதையும் படிங்க: எத்தனை நாட்களுக்கு சட்டசபை கூட்டம்? ... சபாநாயகர் அப்பாவு முக்கிய அறிவிப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share