“கண்ணீரில் மீனவக் கிராமங்கள்!” ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் கைது; இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர்.
தமிழக மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி விவகாரத்தில் இலங்கை கடற்படையின் ‘அராஜகப் போக்கு’ ஓயாத நிலையில், இன்று ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மேலும் 3 மீனவர்கள் மற்றும் ஒரு விசைப்படகினை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இந்த அதிரடிக் கைது நடவடிக்கை அரங்கேறியுள்ளது. தொடர்ச்சியாக மீனவர்கள் வேட்டையாடப்படுவதால் ராமேஸ்வரம் துறைமுகத்தில் பதற்றமான சூழல் நிலவுவதுடன், மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகள் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என மீனவச் சங்கங்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
ராமேஸ்வரம், டிசம்பர் 30: ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று வழக்கம் போலத் தொழில் அனுமதிச் சீட்டு பெற்று நூற்றுக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். மீனவர்கள் நெடுந்தீவு கடல் பகுதியில் தங்களது வாழ்வாதாரத்திற்காக மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையில், அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி மீனவர்களைச் சூழ்ந்து கொண்டனர்.
இதையும் படிங்க: அத்துமீறும் இலங்கை கடற்படை..!! கைதானவர்களை ரிலீஸ் பண்ணுங்க..!! மீனவர்கள் வேலை நிறுத்தம்..!!
இதனைத் தொடர்ந்து, ஒரு விசைப்படகைக் கைப்பற்றிய இலங்கை கடற்படை, அதில் இருந்த 3 மீனவர்களையும் அதிரடியாகக் கைது செய்தது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட படகு ஆகியவை விசாரணைக்காகக் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளன. இலங்கை சிறையில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் வாடி வரும் நிலையில், இந்த அடுத்தடுத்த கைது நடவடிக்கைகள் ராமேஸ்வரம் மீனவ கிராமங்களில் பெரும் சோகத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ச்சியாக அரங்கேறி வரும் இத்தகைய சிறைபிடிப்பு மற்றும் தாக்குதல் சம்பவங்களால் கடலுக்குச் செல்லவே அச்சமாக இருப்பதாகவும், தங்களது வாழ்வாதாரமே முற்றிலும் முடங்கிப் போய்விட்டதாகவும் மீனவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் தூதரக ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதையும் படிங்க: தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்..!! தமிழக மீனவர்கள் 3 பேர் கைது..!!