×
 
☰

ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடி..! திமுக நிர்வாகி, சார்பதிவாளர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி..!! இடியை இறக்கிய கோர்ட்..!!

ஶ்ரீ ரங்கம் கோவில் நில மோசடி விவகாரத்தில் இருவரது முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலம் தொடர்பான மோசடி வழக்கு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள இந்த நில விவகாரம் இப்போது நீதிமன்ற நிலையில் முக்கிய திருப்பத்தை எட்டியுள்ளது. கோயிலுக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் எண்பத்தி ஏழு சென்ட் நிலத்தின் ஒரு பகுதியை போலி ஆவணங்களைப் பயன்படுத்தி முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்ததாக எழுந்த புகாரில், திமுகவின் ஸ்ரீரங்கம் பகுதிச் செயலாளர் ராம்குமார் மற்றும் அப்போதைய சார்பதிவாளர் வனிதா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவர்கள் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது.இந்த நில விவகாரம் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. ஸ்ரீரங்கம் காந்தி சாலையில் அரசு மருத்துவமனைக்கு அருகில் அமைந்துள்ள இந்த இடம், கோயிலுக்குத் தானமாக வழங்கப்பட்ட சொத்தாகும். பழைய ஆவணங்களின்படி, 1866ஆம் ஆண்டு காலகட்டத்திலேயே இப்பகுதி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கோயிலுக்குச் சொந்தமானவை எனப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலத்தின் ஒரு பகுதியில் கட்டிடத்துடன் கூடிய சுமார் ஏழாயிரத்து ஐந்நூற்று பதினைந்து சதுர அடி இடம், தற்போது சுமார் ஐம்பது கோடி ரூபாய் சந்தை மதிப்புடையதாகக் கருதப்படுகிறது. இந்த இடத்தை 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் போலி ஆவணங்களைக் கொண்டு ராம்குமார் பெயருக்குப் பத்திரப்பதிவு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.புகாரின்படி, சில தனியார் நபர்கள் இந்த நிலத்திற்கு உரிமை உண்டெனக் கூறி, போலி ஆவணங்களைத் தயாரித்து ராம்குமாருக்கு விற்றனர். அப்போதைய ஸ்ரீரங்கம் சார்பதிவாளர் வனிதா இந்தப் பதிவை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. பதிவுக்குப் பிறகு அந்த இடத்தில் திமுக கட்சி அலுவலகம் செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. கோயில் நிர்வாகத் தரப்பில் இணை ஆணையர் இந்த விவரங்களைக் கண்டறிந்து திருச்சி மாநகர குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார்.

இதையும் படிங்க: கோவிந்தா... கோபாலா..! திருப்பதி பிரம்மோற்சவம்... மோகினி அவதாரத்தில் சுவாமி வீதியுலா.!!

அதன் அடிப்படையில் ராம்குமார், வனிதா உள்ளிட்ட ஆறு பேர் மீது மோசடி, போலி ஆவணம் தயாரித்தல், அவற்றைப் பயன்படுத்துதல் மற்றும் சதி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கருதிய ராம்குமாரும் வனிதாவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் கோரி மனுக்களைத் தாக்கல் செய்தனர். அவர்கள் தரப்பில் இந்த நிலம் தனியார் சொத்து என்றும், முறையான பரிசோதனைக்குப் பிறகே பதிவு செய்யப்பட்டது என்றும் வாதிடப்பட்டது. ஆனால் கோயில் நிர்வாகத் தரப்பும் அரசுத் தரப்பும் இந்த வாதங்களை எதிர்த்து, விசாரணைக்குத் தேவையான காவல் பிடிப்பு அவசியம் என வலியுறுத்தினர். விசாரணைக்குப் பிறகு நீதிமன்றம் இருவரின் முன்ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது

 

இதையும் படிங்க: மக்களே கவனிங்க.. மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு... சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share