2026-ல் திமுக ஒண்ணுமே இல்லாமல் போகும்! பட்ஜெட்டை விமர்சித்த முதல்வருக்கு நைனார் நாகேந்திரன் பதிலடி!
ஒன்றிய பட்ஜெட் 2026-27 குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்வைத்த விமர்சனங்களுக்கு, தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் அதிரடிப் பதிலளித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டை ஆராய்ந்து பார்க்காமல், ஒன்றுமே இல்லை என்று கூறி வரும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்குத் தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் அவர்கள் இன்று காரசாரமானப் பதிலடி கொடுத்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் திட்டங்களைத் தனது திட்டங்களாகச் சித்தரிக்கும் திமுக அரசின் செயல்பாடுகளைப் பட்டியலிட்டுத் தோல் உரித்துக் காட்டினார்.
கடந்த ஐந்தாண்டு திமுக ஆட்சியில் எத்தனைப் புதிய மருத்துவக் கல்லூரிகளை இந்த அரசு கொண்டு வந்தது? முன்னாள் முதல்வர் ஈபிஎஸ் அவர்கள் ஒரே நேரத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டு வந்தார். ஆனால், தற்போதைய முதல்வர் டெல்லி சென்று எதையாவது கேட்டு வாங்கி வந்திருக்கிறாரா? என வினவினார். ரேஷன் கடைகளில் மத்திய அரசு வழங்கும் இலவசப் பொருட்களைத் தனது ஸ்டிக்கர் ஒட்டித் தமிழக அரசு விநியோகித்து வருகிறது. அதுமட்டுமின்றி, பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் மத்திய அரசின் பங்கு 60% உள்ளது, ஆனால் அதையும் மாநில அரசின் திட்டமாகச் சொல்லி வருகிறார்கள் என்று அவர் சாடினார்.
பட்ஜெட்டைப் படித்துப் பார்க்காமல், அதன் உள்ளடக்கங்களை ஆராயாமல் ஒன்றுமே இல்லை எனப் பேசுவது வழக்கம் ஆகிவிட்டது. இப்படி ஒன்றுமே இல்லை எனச் சொல்லிக்கொண்டே இருந்தால், வரும் 2026 தேர்தலில் திமுக ஒன்றுமே இல்லாமல் தான் இருக்கும் என்று எச்சரித்தார்.
இதையும் படிங்க: இது டப்பா என்ஜின் அல்ல.. சூப்பர் பாஸ்ட் என்ஜின்! விமர்சனங்களுக்கு தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி!
இந்த பட்ஜெட் வெறும் நிதி ஒதுக்கீடு மட்டுமல்ல, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை உலகிற்கு பறைசாற்றும் பட்ஜெட் என்று குறிப்பிட்ட அவர், இதிலுள்ள முக்கியச் சிறப்பம்சங்களைப் பட்டியலிட்டார். கடந்த ஆண்டை விட 10% அதிகமாக 12.20 லட்சம் கோடி ரூபாய் மூலதனச் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும். தமிழகத்திற்கு 11 வந்தே பாரத் ரயில்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது சென்னை - பெங்களூரு - ஹைதராபாத் இடையே அதிவேக ரயில்கள் இயக்கப்பட உள்ளன. உலகத் தரத்திற்கு இந்தியாவை உயர்த்த செமி கண்டக்டர் துறைக்கு மட்டும் 40,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மருத்துவத் துறைக்கு 10,000 கோடி ரூபாயும், பெண்கள் பாதுகாப்பு மற்றும் மாவட்டம் தோறும் விடுதிகள் கட்டவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த கலாச்சார மையம் ஏற்படுத்தப்படும் எனத் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வரும் முன் கொடுத்த வாக்குறுதிகளைத் திமுக அரசு மீறிவிட்டதாக நைனார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார். மின் கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என்று சொல்லிவிட்டு, தற்போது 300% வரை உயர்த்தியுள்ளனர். சொத்து வரியை உயர்த்த மாட்டோம் என்று கூறிவிட்டு, இன்று 300% சொத்து வரியை உயர்த்தி மக்கள் மீது பெரும் சுமையைச் சுமத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: வளர்ந்த இந்தியாவிற்கான ரிஃபார்ம் எக்ஸ்பிரஸ்! 140 கோடி இந்தியர்களின் லட்சிய பட்ஜெட் - பிரதமர் மோடி பெருமிதம்!