×
 

5 மாவட்டங்களில் அதிரடி அமலாக்கம்... சாலையோர வியாபாரிகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் சொன்ன குட்நியூஸ்...!

சாலையோர உணவு விற்பனையை முறைப்படுத்த புதிய திட்டம்; 5 மாவட்டங்களில் முதற்கட்ட அமலாக்கம் – அமைச்சர் அருண்ராஜ்

தெருவோர உணவுக் கடைகளில் சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்வதை ஊக்குவிக்கும் வகையில், கடன் உதவி வழங்கும் திட்டம் முதற்கட்டமாக சென்னை, திருச்சி, மதுரை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சாலையோர உணவு விற்பனையை முறைப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறினார். பொதுமக்களுக்கு ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான உணவுகளை வழங்கும் நோக்கில் “ஹெல்தி அண்ட் ஹைஜினிக் ஸ்ட்ரீட் ஃபுட்” என்ற திட்டக் கருத்தின் அடிப்படையில் செயல்பட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன் ஒரு பகுதியாக, தேர்வு செய்யப்பட்ட மாவட்டங்களில் தலா ஒரு சாலையை முன்மாதிரி சாலையாக தேர்ந்தெடுத்து, அங்கு செயல்பட்டு வரும் தெருவோர உணவு விற்பனையாளர்களுக்கு சுகாதாரமான சூழலை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது. மேலும், உணவு விற்பனை கடைகள் தரநிலைப்படுத்தப்பட்ட முறையில் அமைக்கப்படுவதுடன், அதற்குத் தேவையான ஆரம்ப முதலீட்டிற்காக கடன் உதவியும் வழங்கப்படும் என அமைச்சர் கூறினார்.

இதையும் படிங்க: அன்புமணியை ஆரத்தழுவி கண்ணீர் வடித்த மறுகணமே... ராமதாஸ் எடுத்த அதிமுக்கிய முடிவு...!

முதற்கட்டமாக சென்னை, திருச்சி, மதுரை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், அங்கு உள்ள அனைத்து தெருவோர உணவு விற்பனையாளர்களும் தரமான மற்றும் சுகாதாரமான உணவுகளை வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் அருண்ராஜ், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அல்லது சேவைகள் வழங்குவதற்காக மருத்துவ பணியாளர்கள் அல்லது ஊழியர்கள் நோயாளிகளிடம் லஞ்சம் பெற்றால், அவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

அரசு மருத்துவமனைகளில் வெளிப்படையான மற்றும் நேர்மையான சேவையை உறுதி செய்ய அரசு உறுதிபூண்டுள்ளதாகவும், லஞ்சம் தொடர்பான புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: உண்மையை உரக்கப் பேசுவோம், மக்கள் சக்தி வெல்லும்: அனிதா ராதாகிருஷ்ணன் திட்டவட்டம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share