நேற்று தென்காசி.. இன்று நீலகிரி.. விடுதி உணவு சாப்பிட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி..!
கூடலூரில் உறைவிடப்பள்ளி விடுதி உணவை சாப்பிட்ட 33க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள், உணவு உட்கொண்ட பின்னர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. தென்காசி, குற்றாலம், திருவண்ணாமலை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி விடுதிகளில் மாணவர்கள் உணவு விஷத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பழங்குடி மாணவர்கள் உள்பட 90-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். குறிப்பாக 33-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். வழக்கம்போல மாணவர்கள் காலை விடுதியில் கொடுக்கப்பட்ட உணவை சாப்பிட்டனர்.
உணவு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அவர்களுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றியதையடுத்து, அவர்கள் உடனடியாக கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: மாணவர்களுக்கான "BEST CITIES".. லிஸ்டில் இடம்பெற்ற 4 இந்திய நகரங்கள்..!
முதற்கட்ட விசாரணையில், மாணவர்களுக்கு உணவு மூலம் உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வகத்தில் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு தரமற்றதாக இருந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவர்களின் நிலை தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் பலர் படிப்படியாக குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் உணவு தரத்தை உறுதி செய்ய கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
நேற்று குற்றாலம் அருகே பண்பொழி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி விடுதியில் உணவு சாப்பிட்ட 9 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், இன்று கூடலூரில் விடுதி உணவை சாப்பிட்ட 33க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மாணவர்களுக்கான "BEST CITIES".. லிஸ்டில் இடம்பெற்ற 4 இந்திய நகரங்கள்..!