மின்துறையில் மாஸ்டர் பிளான்... துணை மின் நிலையங்கள் குறித்து அமைச்சர் சொன்ன குட்நியூஸ்
2026–27ஆம் ஆண்டில் 231 புதிய துணை நிலையங்களின் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
மின்சாரத்துறை தொடர்பான வெள்ளை அறிக்கையில் துணை மின்நிலையங்கள் குறித்து பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: இப்போது உள்ள மின் துணை நிலையங்களை (Substations) பழுது பார்க்கவும், மேம்படுத்தவும் இந்த ஆண்டிலேயே பல்வேறு திட்டங்களை தொடங்க உள்ளோம். சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட மொத்தம் 12 மண்டலங்களில் உள்ள பழைய துணை நிலையங்களை உடனடியாக மேம்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதற்காக மொத்தம் ₹8,318 கோடி மதிப்பில் பழைய துணை நிலையங்களை புதுப்பிக்கும் மற்றும் பழுதுபார்க்கும் பணிகளை தொடங்க உள்ளோம். இந்தத் திட்டத்திற்கு முதலமைச்சரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் பணிகளைப் பார்த்தால், 121 துணை நிலையங்களின் கட்டுமானப் பணிகள் முன்னேற்ற நிலையில் உள்ளன. முந்தைய ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 423 துணை நிலையங்களில், 32 மட்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. 121 பணிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் 20 திட்டங்கள் 2016–2021 காலகட்டத்தில் தொடங்கப்பட்டும் இன்னும் நிறைவடையாமல் உள்ளன. மீதமுள்ள 270 திட்டங்கள் அறிவிப்புகளாக மட்டுமே உள்ளன; அவற்றுக்கான இடங்கள்கூட இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
இதையும் படிங்க: அரசியலமைப்பு படுகொலை தினம்! இருண்ட காலத்தை நினைவூட்டுகிறது! பிரதமர் மோடி அஞ்சலி!
இதுவரை இத்திட்டங்களுக்கான நிதி பெரும்பாலும் கடன் வசதிகள் மூலம் திரட்டப்பட்டு வருகிறது. இனி வரும் ஆண்டுகளில் இந்த நிலுவைப் பணிகளை நிறைவேற்றுவதோடு, பழைய துணை நிலையங்களை புதுப்பிக்கும் பணிகளையும், புதிய துணை நிலையங்களை அமைக்கும் பணிகளையும் இணைத்து மேற்கொள்வோம்.
2026–27ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள முக்கிய பணிகளில், 15,000 புதிய பணியிடங்கள் மற்றும் 5,000 கேங்மேன் பணியிடங்கள் என மொத்தம் 20,000 பேர் நியமிக்கப்பட உள்ளனர். அதேபோல், பழைய துணை நிலையங்களை புதுப்பிக்கும் பணிகளும் உடனடியாக தொடங்கப்படுகின்றன.
மேலும், 2026–27ஆம் ஆண்டில் 231 புதிய துணை நிலையங்களின் பணிகள் தொடங்கப்பட உள்ளன. இவை முதலமைச்சர் அறிவித்த ரூ.15,000 கோடி திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்துள்ளதால், கட்டுமானப் பணிகள் உடனடியாக தொடங்கப்படும்.
அதேபோல், 1,056 திறன் மேம்பாட்டு பணிகள், 60,000 மின் மாற்றிகள் (Transformers) மற்றும் 21.7 லட்சம் மீட்டர்கள் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் சேர்த்து, இந்த ஆண்டில் மட்டும் ரூ.21,512 கோடி மதிப்பிலான மின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு மற்றும் நிலைநிறுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
அடுத்த நான்கு ஆண்டுகளில் மேலும் 238 புதிய துணை நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனுடன், 1.5 லட்சம் புதிய மின் மாற்றிகளை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்கால மின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்த நடவடிக்கைகள் அவசியமாகும்.
தற்போது சுமார் 47,000 மின் மாற்றிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், மின் தேவையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்த எண்ணிக்கையை குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டு தொடங்கப்பட உள்ள 231 துணை நிலையங்கள் எந்த மண்டலங்களில் அமைக்கப்படுகின்றன என்பதற்கான பிராந்திய வாரியான (Region-wise) விவரங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. அதேபோல், 2027 முதல் அடுத்த நான்கு ஆண்டுகளில் அமைக்கப்பட உள்ள துணை நிலையங்களின் மண்டல வாரியான திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன.
இத்திட்டங்களுக்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டு, நிதி திரட்டும் பணிகள் கடன் ஏற்பாடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மொத்தத்தில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 469 புதிய துணை நிலையங்களை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்கால தேவைகளின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை மேலும் உயர்த்தப்படலாம். இருப்பினும், தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, நீண்டகால நோக்குடன் 469 துணை நிலையங்களை அமைப்பதே தற்போதைய திட்டமாகும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தடலாடியாக சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! 4 மாதத்தில் இல்லாத இறக்கம்! உலக நாடுகள் மகிழ்ச்சி!