விண்வெளியில் இருந்து வந்த அழைப்பு.. சுபான்ஷு சுக்லாவுடன் இஸ்ரோ தலைவர் பேசியது என்ன..?
விண்வெளியில் இருக்கும் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன், இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தொலைபேசியில் பேசினார்.
இஸ்ரோ விண்வெளி ஆய்வு நிறுவனம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி, அவர்களை மீண்டும் அழைத்து வரும் ககன்யான் திட்டத்தை 2027ல் செயல்படுத்த திட்டமிட்டு, பணிகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவின் ஆக்சியம் ஸ்பேஸ் எனும் தனியார் நிறுவனம், விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு வீரர்களை அனுப்பும் திட்டத்தில் ஈடுபட்டது.
ஆக்சியம் 4 என்ற திட்டத்தின் கீழ், இந்திய விமானப் படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு, போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கியை சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு அனுப்பி உள்ளது.
இதையும் படிங்க: சீறிப் பாய்ந்தது ஃபால்கன் 9 விண்கலம்.. விண்வெளிக்கு புறப்பட்டார் சுபான்ஷு சுக்லா!
டிராகன் விண்கலம் வாயிலாக விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேர் அடங்கிய குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் சென்றனர். அங்கு அவர்கள் 14 நாட்கள் தங்கியிருந்து, ஆய்வு பணிகளை மேற்கொள்கின்றனர். மொத்தம் 60 ஆராய்ச்சிகளை அவர்கள் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படும் நிலையில், அதில், ஏழு ஆராய்ச்சிகள் இந்தியாவுக்கானவை என கூறப்பட்டுள்ளது. இதனிடையே பயணத்தின் 10வது நாளில், சுபான்ஷு சுக்லா ஐஎஸ்எஸ்ஸில் எலும்பு பரிசோதனையை மேற்கொண்டார்.
கடந்த வாரம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்று இந்தியாவை பெருமை படுத்திய சுபான்ஷு சுக்லா உடன் பிரதமர் மோடி உரையாடல் நிகழ்த்தினார். கேப்டன் சுபான்ஷு சுக்லாவுடன் செய்த உரையாடல் குறித்து பேசிய பிரதமர் மோடி, குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவுடன் அற்புதமான உரையாடல் நிகழ்த்தினேன். சர்வதேச விண்வெளி ஆய்வு மைய அனுபவங்களை சுபான்ஷு சுக்லா பகிர்ந்து கொண்டதாக கூறினார்.
இந்நிலையில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன், இஸ்ரோ தலைவரும், விண்வெளித் துறையின் செயலாளருமான வி.நாராயணன் மற்றும் விஞ்ஞானிகள் தொலைபேசியில் கலந்துரையாடினர். தொடர்ந்து சர்வதேச விண்வெளி நிலையத்தில் நடத்தப்படும் பல்வேறு அறிவியல் பரிசோதனைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து இஸ்ரோ தலைவர் விசாரித்தார்.
சுபான்ஷு பூமிக்குத் திரும்பிய பிறகு அனைத்து சோதனைகள் மற்றும் செயல்பாடுகளையும் கவனமாக ஆவணப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் வலியுறுத்தினார். ஏனெனில் இது இந்தியாவின் மனித விண்வெளிப் பயணத் திட்டமான ககன்யானின் வளர்ச்சிக்கு முக்கியமான நுண்ணறிவுகளை வழங்கும் என்றார். சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் தங்கள் 14 நாட்கள் தங்களது ஆய்வு பயணத்தை முடித்துக்கொண்டு வரும் 10 ஆம் தேதி பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இந்த டைம் கன்ஃபார்ம்.. 5வது முறையாக பிக்ஸான டேட்..! ஜூன் 22ல் விண்வெளி செல்கிறார் சுபான்ஷு சுக்லா..!