×
 
☰

மாவட்ட நீதிமன்றங்களில் பெண் வழக்கறிஞர்களுக்கு தனி ஓய்வறை..! மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

மாவட்ட நீதிமன்றங்களில் பெண் வழக்கறிஞர்களுக்கு தனி ஓய்வறை மற்றும் கழிப்பறை அமைத்து கொடுக்க மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மாவட்ட, கோட்ட மற்றும் தாலுகா நீதிமன்ற வளாகங்களில் பெண் வழக்கறிஞர்கள் பணியாற்றும் இடங்களில், அவர்களின் எண்ணிக்கையைக் காரணம் காட்டாமல் கட்டாயமாகத் தனி ஓய்வறை, சுகாதாரமான கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கும் இந்திய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் பெண் வழக்கறிஞர்களுக்குத் தகுந்த ஓய்வறைகளோ அல்லது சுகாதாரமான கழிப்பறை போன்ற அத்தியாவசியக் கட்டமைப்பு வசதிகளோ முறையாக இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி தொடரப்பட்ட பொதுநல வழக்கை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய் மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீவிர விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

விசாரணையின் போது, நீதிமன்றங்களில் பணிபுரியும் பெண் வழக்கறிஞர்களுக்குத் தனி ஓய்வறைகளோ அல்லது உரிய சுகாதார வசதிகளோ இல்லாத அவல நிலையைத் தங்களது அமர்வு மிக வன்மையாகக் கண்டிப்பதாகத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்தார். நீதித்துறை உள்கட்டமைப்பில் பாலின சமத்துவமும் கண்ணியமான பணிச்சூழலும் உறுதி செய்யப்பட வேண்டியது மிக அவசியமாகும். எனவே, தேவைப்படும் நீதிமன்ற வளாகங்களில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்தும், நிலங்களை ஒதுக்கியும் இப்பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று அமர்வு உத்தரவிட்டது.

இதையும் படிங்க: இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடம் வசூலிக்க கோரிய வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி நோட்டீஸ்!

இதற்காக உயர் நீதிமன்றங்களின் உள்கட்டமைப்புக் குழுக்கள் (Infrastructure Committees) இந்தப் பணிகளுக்கு முதன்மை முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், அதற்கேற்ப மாநில அரசுகள் தேவையான கூடுதல் நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக அறிவுறுத்தினர். மேலும், நாடு முழுவதும் இப்பணிகளை ஒருங்கிணைத்துத் தொடர்ச்சியாகக் கண்காணிக்கும் உயரிய பொறுப்பு இந்தியத் தலைமை வழக்கறிஞர் (Attorney General for India) ஆர். வெங்கடரமணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடமிருந்து இது தொடர்பான முன்னேற்ற அறிக்கைகளைப் பெற்றுத் தொகுத்து, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அட்டர்னி ஜெனரலுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் டிசம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதையும் படிங்க: கவின் ஆணவப் படுகொலை.! குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு... சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share