நீட் போராட்ட மாணவர் வழக்குகள் ரத்து! உச்சநீதிமன்றம் சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி அதிரடி தீர்ப்பு!
நீட் வினாத்தாள் கசிவு போராட்டத்தில் மாணவர்கள் மீது பதிவான எஃப்.ஐ.ஆர்களை சட்டப்பிரிவு 142-ன் கீழ் உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மத்திய கல்வி அமைச்சரின் பதவி விலகலை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் (FIR) அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 142-ன் கீழ் தனக்குள்ள பிரத்யேக சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் மாணவர் அமைப்புகள் மற்றும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் சார்பில் நாடு தழுவிய தீவிரப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதில் பல்வேறு இடங்களில் தள்ளுமுள்ளு மற்றும் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறியதாகக் கூறி ஆயிரக்கணக்கான மாணவர்கள் மீது பல மாநிலக் காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில், மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, பிரிவு 142-ஐப் பயன்படுத்தி இந்த எஃப்.ஐ.ஆர்-களை ரத்து செய்யுமாறு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் சிறப்பு மனுவைத் தாக்கல் செய்தது.
இதையும் படிங்க: மாணவர் போராட்ட FIR-களை ரத்து செய்ய மத்திய அரசு மனு! உச்சநீதிமன்றத்தில் நாளை அவசர விசாரணை!
இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று இறுதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, டெல்லி, பீகார், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் ஜூலை 20 முதல் 25 வரை நடைபெற்ற போராட்டங்கள் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட அனைத்து FIR-களும் சட்டப்பிரிவு 142-ன் கீழ் ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்படுகின்றன.
பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள இதேபோன்ற வழக்குகள் மீதும் எவ்வித மேல் விசாரணையும் நடத்தக் கூடாது; மேலும், இப்போராட்டம் தொடர்பாகப் புதிய வழக்குகளைப் பதிவு செய்யவும் தடை விதிக்கப்படுகிறது எனத் தீர்ப்பளித்தனர்.
அதேசமயம், பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துதல் மற்றும் கடுமையான தாக்குதல்களில் ஈடுபட்டதாகத் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தால் (NCRB) அடையாளம் காணப்பட்ட டெல்லியைச் சேர்ந்த 2,873 நபர்கள் மீது மட்டும் ஒரே ஒரு புதிய வழக்குப் பதிவு செய்து டெல்லி காவல்துறை சட்டப்பூர்வ விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
மேலும், நீட் தேர்வு விவகாரத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்கான அகில இந்திய அளவிலான கொள்கை கட்டமைப்பை, மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து 3 மாதங்களுக்குள் மத்திய அரசு உருவாக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் திட்டவட்டமாக உத்தரவிட்டனர்.
நீதிமன்ற விசாரணையின் போது ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மாணவர் வழக்குகளை அரசு கைவிடும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவதாகவும், இழப்பீட்டுக் கொள்கையை 3 மாதங்களுக்குள் வகுப்பதாகவும் உறுதி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த பிரம்மாண்ட அமைதிப் பேரணியைத் திரும்பப் பெறுவதாகக் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் சௌரவ் தாஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இருதரப்பின் இந்த இணக்கமான முடிவை வரவேற்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த், "நன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் எந்தப் பிரச்சினைக்கும் சுமூகத் தீர்வு கிடைக்கும்" எனப் பாராட்டியதோடு, இந்த உத்தரவு தனிப்பட்ட சிறப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், எதிர்கால வழக்குகளுக்கு இதனை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள முடியாது எனவும் தெளிவுபடுத்தினார்.
இதையும் படிங்க: முரண்டு பிடிக்கும் கர்நாடகா..! தண்ணீர் தர என்ன பிரச்சனை.? வெளுத்து வாங்கிய சுப்ரீம் கோர்ட்..!!