×
 

குறுகிய சாலைகளுக்கு குட் பை! தமிழகம் முழுவதும் மெகா மாற்றம்! 45,000 கி.மீ. சாலைகளில் மெகா மாற்றம்!

தமிழகத்தில் நகரமயமாக்கல் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், ஆண்டுதோறும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில், 45,000 கி.மீ. தொலைவிலான மாவட்ட இதர சாலைகளை படிப்படியாக இருவழிச்சாலைகளாக மேம்படுத்த மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான மாவட்ட அளவிலான ஆய்வுப் பணிகள் தொடங்கியுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் மாவட்ட முக்கிய சாலைகள் மற்றும் மாவட்ட இதர சாலைகள் என மொத்தம் சுமார் 70,000 கி.மீ. சாலைகள் உள்ளன. இதில் மாவட்ட இதர சாலைகள் மட்டும் சுமார் 45,000 கி.மீ. நீளம் கொண்டதாக உள்ளன. இந்த சாலைகளை பராமரிக்கவும், மேம்படுத்தவும் தமிழகம் முழுவதும் 68 கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் நகரமயமாக்கல் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், ஆண்டுதோறும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொரோனா காலத்துக்குப் பிறகு இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் உள்ளிட்ட சொந்த வாகனங்களின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் முக்கிய சாலைகளை இணைக்கும் உள்ளூர் சாலைகளிலும் போக்குவரத்து அழுத்தம் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: மகளிர் திட்டத்தில் ரூ.600 கோடி முறைகேடு? தணிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட முக்கிய சாலைகள் பல்வேறு கட்டங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில், கிராமங்கள் மற்றும் நகரங்களை மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணைக்கும் பல மாவட்ட இதர சாலைகள் இன்னும் குறுகியதாகவே உள்ளன. இதனால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், சாலை பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளும் உருவாகின்றன.

தற்போது 45,000 கி.மீ. மாவட்ட இதர சாலைகளில் சில பகுதிகள் 3.75 மீட்டர், சில பகுதிகள் 5.5 மீட்டர் அகலத்தில் உள்ளன. இவற்றில் தேவைக்கு ஏற்ற சாலைகளை இருவழிச்சாலைகளாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட உள்ளன.

இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் சாலைகளின் தற்போதைய நிலை, போக்குவரத்து அளவு, எதிர்கால பயன்பாடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆய்வு முடிந்து தயாரிக்கப்படும் அறிக்கையின் அடிப்படையில், முன்னுரிமை நிர்ணயிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், 45,000 கி.மீ. சாலைகளும் ஒரே நேரத்தில் இருவழிச்சாலைகளாக மாற்றப்படாது. தேவைக்கு ஏற்ப கட்டங்களாக பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்வதைப் பொறுத்தே திட்டத்தின் வேகம் அமையும்.

இதையும் படிங்க: பேரிடர் மேலாண்மையில் தமிழக அரசுக்கு மத்திய குழு பாராட்டு! ஆனால் இந்த விஷயத்தில் இன்னும் வேகம் தேவை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share