×
 
☰

கோடை முடிந்தும் கொளுத்தும் வெயில்! வாட்டும் வறட்சி! தமிழக அணைகளில் அதிர்ச்சி நிலவரம்!

இதனால் நல்ல மழை பெய்தாலும், கிடைக்கும் நீரை முழுமையாக சேமிப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை காலம் முடிந்த பிறகும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் தொடர்ந்து வாட்டி வரும் நிலையில், நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 90 அணைகளில் 63 அணைகள் குறைந்த நீர் இருப்பால் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன. மொத்த அணைகளிலும் தற்போது 34 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளதால், வரும் மாதங்களில் குடிநீர் மற்றும் பாசன தேவையை சமாளிப்பது குறித்த கவலை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 90 அணைகளை நீர்வளத்துறை பராமரித்து வருகிறது. இந்த அணைகளின் மொத்த கொள்ளளவு சுமார் 224 டி.எம்.சி. ஆகும். தற்போது அவற்றில் 76.4 டி.எம்.சி. அளவுக்கு மட்டுமே தண்ணீர் இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மொத்த கொள்ளளவில் மூன்றில் ஒரு பங்குக்கும் சற்று அதிகமான அளவே நீர் இருப்பு உள்ளது.

இந்த அணைகள் மூலம் பல மாவட்டங்களில் விவசாய பாசனம், குடிநீர் மற்றும் மின்சார உற்பத்திக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள சில அணைகள் வனவிலங்குகள் மற்றும் பறவைகளுக்கும் முக்கியமான நீராதாரமாக உள்ளன.

இதையும் படிங்க: குடைக் கொண்டு போக மக்களே...! கனமழை அலர்ட்..! வானிலை மையம் அறிவிப்பு..!!

தற்போதைய நிலவரப்படி 90 அணைகளில் 63 அணைகளில் 25 சதவீதத்துக்கும் குறைவாகவே நீர் இருப்பு உள்ளது. இதில் சில அணைகளில் நீர் அளவு மிகவும் குறைந்து, அணையின் அடிப்பகுதியில் சேறு மற்றும் சகதி வெளிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், 17 அணைகளில் சுமார் 17 சதவீதம் அளவுக்கே நீர் இருப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அணைகளில் நீண்டகாலமாக தேங்கியுள்ள மண், சேறு மற்றும் திடக்கழிவுகளும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. இத்தகைய படிவுகள் அணைகளின் பயனுள்ள நீர் சேமிப்பு திறனை குறைக்கக்கூடும். இதனால் நல்ல மழை பெய்தாலும், கிடைக்கும் நீரை முழுமையாக சேமிப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கோடை காலம் முடிந்த பின்னரும் சில மாவட்டங்களில் வெப்பம் தொடர்ந்து அதிகமாக உள்ளது. நீண்டகால வெப்பநிலையும் குறைந்த நீர் வரத்தும் அணைகளின் இருப்பை மேலும் பாதித்துள்ளன.

தற்போதைய சூழலில் வடகிழக்கு பருவமழை மீது நீர்வளத்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். பருவமழை போதுமான அளவில் பெய்து அணைகள் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்தால்தான் குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்கான அழுத்தம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: முதலீட்டாளர்களுக்கு குட் நியூஸ்! 20 துறை செயலர்களுடன் புதிய ஆணையம் அமைத்த தமிழக அரசு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share