×
 

மழைக்கு முன்பே அலர்ட்! தமிழகத்தில் எகிறும் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு – சென்னைக்கு ஏன் ‘டாப்’ இடம்?

மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில், டெங்கு பரப்பும் கொசுக்களின் பெருக்கத்தைத் தடுக்க சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது முக்கியம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

சென்னை: தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு கடந்த ஆண்டை ஒப்பிடும்போது அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் டெங்கு பாதிப்பு வேகமாக உயர்ந்துள்ள நிலையில், மழைக்காலம் தொடங்க உள்ளதால் கூடுதல் முன்னெச்சரிக்கை அவசியம் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்டு 30-ம் தேதி வரை 13,573 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஜனவரியில் 1,722 ஆக இருந்த பாதிப்பு, பிப்ரவரி முதல் மே வரை படிப்படியாக குறைந்தது. ஆனால் ஜூன் மாதத்திலிருந்து மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. ஜூலையில் 2,339 பேரும், ஆகஸ்டில் 3,315 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூலையில் 1,880 பேருக்கு டெங்கு பாதிப்பு இருந்த நிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 2,339 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கடந்த ஆண்டு ஆகஸ்டில் 1,832 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டில் 3,315 ஆக அதிகரித்துள்ளது. மொத்த பாதிப்பில் சென்னையில் மட்டும் 2,584 பேர் உள்ளனர். கோவையில் 1,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: தமிழகத்திற்கு மத்திய மின்சாரம் திடீர் குறைப்பு! 5,000-ல் இருந்து 3,500 மெகாவாட்டாக சரிவு! புதிய நெருக்கடி!

பன்றிக் காய்ச்சல் பாதிப்பிலும் இதேபோன்ற அதிகரிப்பு காணப்படுகிறது. இந்திய அளவில் சுமார் 9 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், தமிழகத்தில் மட்டும் 1,558 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்டில் 46 பேருக்கு இருந்த பாதிப்பு, இந்த ஆண்டு அதே மாதத்தில் 645 ஆக உயர்ந்துள்ளது.

மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில், டெங்கு பரப்பும் கொசுக்களின் பெருக்கத்தைத் தடுக்க சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது முக்கியம் என டாக்டர்கள் கூறுகின்றனர். காய்ச்சல் ஏற்பட்டால் அலட்சியம் செய்யாமல் உரிய மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் மற்றவர்களுக்கு தொற்று பரவுவதைத் தடுக்க சில நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வதும், தேவையான இடங்களில் முகக்கவசம் அணிவதும் அவசியம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக இருப்பதால் தொற்று ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும் சூழல் இருப்பதாகவும், பொதுமக்கள் அச்சப்படாமல் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: கோவிலுக்கு சென்றபோது சோகம்! லாரி மீது ஆட்டோ மோதி 3 பேர் பலி! பெரியபாளையம் அருகே அதிர்ச்சி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share