தமிழகத்தில் 6 மாதங்களில் 4.68 லட்சம் பேருக்கு நாய்க்கடி... 24 பேர் பலி! அதிர்ச்சி ரிப்போர்ட்!
தமிழகத்தில் ஆறு மாதங்களில் நாய்க்கடியால், 4.68 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 24 பேர், 'ரேபிஸ்' நோயால் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் தெரு நாய்கள் தொடர்பான பிரச்சினை தொடர்ந்து கவலைக்குரியதாக இருந்து வரும் நிலையில், கடந்த ஆறு மாதங்களில் மட்டும் நாய்க்கடியால் 4.68 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரேபிஸ் நோயால் 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
மாநிலம் முழுவதும் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் செலவில் கருத்தடை மற்றும் தடுப்பூசி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இருப்பினும், தெரு நாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், தற்போது தமிழகம் முழுவதும் சுமார் 25 லட்சம் நாய்கள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வந்தாலும், அனைத்து நாய்களுக்கும் தடுப்பூசி போட முடியாத நிலை நீடிப்பதால், நாய்க்கடி சம்பவங்களும் தொடர்ந்து பதிவாகி வருகின்றன.
இதையும் படிங்க: ஜூலையில் ஜிஎஸ்டி வசூல் புதிய உச்சம்... ரூ.2.11 லட்சம் கோடியை தாண்டிய வருவாய்; தமிழ்நாட்டுக்கு ரூ.7,391 கோடி பங்கு!
மாவட்ட வாரியான புள்ளிவிவரங்களில், சேலத்தில் 28,166 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழந்துள்ளனர். கடலூரில் 22,113 பேர் பாதிக்கப்பட்டதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 9,229 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு 3 பேர் ரேபிஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். திருநெல்வேலியில் 23,095 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அங்கு உயிரிழப்பு பதிவாகவில்லை.
சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 6.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு, 34 பேர் ரேபிஸ் நோயால் உயிரிழந்திருந்தனர். அதனுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் குறைந்திருந்தாலும், ஆபத்து முற்றிலும் நீங்கவில்லை என தெரிவித்தனர்.
நாய், பூனை அல்லது குரங்கு கடித்த உடனே காயத்தை சோப்பு மற்றும் ஓடும் நீரால் நன்றாகக் கழுவி, உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று ரேபிஸ் தடுப்பூசி மற்றும் தேவையான சிகிச்சையை பெற வேண்டும் என்றும், தடுப்பூசியை தாமதப்படுத்துவது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: 30 நாட்களுக்குள் மக்கள் மனுக்களுக்கு தீர்வு! தமிழக அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!