முதல் தளத்தில் சுவிட்ச் பழுது சரிசெய்யப்பட்டது! தலைமை செயலக மின்தடைக்கு மின்சார வாரியம் விளக்கம்!
தலைமைச் செயலகத்தின் முதல் தளத்தில் ஏற்பட்ட தற்காலிக மின்தடை உடனடியாக சீரமைக்கப்பட்டதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடத்தின் முதல் தளத்தில் சில பகுதிகளில் இன்று காலை ஏற்பட்ட தற்காலிக மின்தடைக்கு ஒரு சுவிட்சில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே காரணம் என்றும், அந்தப் பழுது உடனடியாகச் சரிசெய்யப்பட்டு மின் விநியோகம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டுவிட்டதாகவும் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை விளக்கம் அளித்துள்ளது.
இன்று காலை தலைமைச் செயலகத்தின் முதல் தளத்தில் மின்தடை ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வாயிலாக செய்தி வெளியீடு எண்: 825 அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
அந்தச் செய்திக்குறிப்பில், சென்னை தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடத்தின் முதல் தளத்தில் சில பகுதிகளில் மட்டும் இன்று (12.10.2026) காலை மின் விநியோகத்தில் தற்காலிகத் தடை ஏற்பட்டது. மற்ற அனைத்துத் தளங்களிலும் மின் விநியோகம் எவ்விதத் தடையுமின்றி இயல்பாகவே செயல்பட்டு வந்தது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை உடனடியாக கைவிடுக! தவெக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!
மின்தடைக்கான காரணத்தை விளக்கியுள்ள மின்சார வாரியம், தலைமைச் செயலக வளாகத்திற்குள் அமைந்துள்ள மின் விநியோகக் கட்டமைப்புகள் அனைத்தும் பொதுப்பணித் துறையின் (கட்டடங்கள் பிரிவு) பராமரிப்பில் உள்ளன. இதில் முதல் தளத்திற்கு மின்சாரம் வழங்கும் நான்கு பிரதான மின் சுவிட்சுகளில், ஒரு சுவிட்சின் பி-ஃபேஸ் மின் விநியோகத்தில் மட்டும் எதிர்பாராத விதமாகத் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், கோளாறு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, பொதுப்பணித் துறை (கட்டடங்கள்) அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டனர். சம்பந்தப்பட்ட மின் சுவிட்சில் ஏற்பட்டிருந்த பழுதை போர்க்கால அடிப்படையில் விரைந்து சரிசெய்து, மின் விநியோகத்தை மீண்டும் சீரமைத்தனர்.
இதனையடுத்து, காலை 11.25 மணியளவில் முதல் தளத்தில் வழக்கமான மின் விநியோகம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டது. தற்போது தலைமைச் செயலகத்தின் அனைத்துத் தளங்களிலும் மின் விநியோகம் எவ்விதத் தடையுமின்றி முழுமையாகச் சீராக இயங்கி வருகிறது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நிதி நெருக்கடியில் மின் வாரியம்!! ரூ.1.86 லட்சம் கோடி மெகா திட்டம்! தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த தாமதம்?