×
 

அரசு ஊழியர்கள் அலுவலகத்தில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

அரசு அலுவலகத்துக்கு செல்லும்போது ஊழியர்கள் கணிசமான அளவு ரொக்கப் பணம் வைத்திருப்பது தொடர்பாக தெளிவான விதிமுறைகள் அவசியம் என நீதிமன்றம் கூறியது.

மதுரை: அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும்போது தங்களிடம் வைத்திருக்கக்கூடிய ரொக்கப் பணத்தின் அளவு தொடர்பாக தமிழக அரசு உரிய வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசின் கருத்தை தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கை செப்டம்பர் 3-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

நெல்லை மாவட்டம் முக்கூடலில் சார்பதிவாளராக கடந்த 2021-ம் ஆண்டு பணியாற்றிய கலா என்பவர் இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார். அவரது அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியபோது ரூ.45 ஆயிரம் கைப்பற்றப்பட்டதாகவும், இதன் அடிப்படையில் தன் மீது வழக்குப்பதிவு செய்து துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த பணம் திருமணச் செலவுக்காக அவர் வைத்திருந்தது என்றும், எனவே தன் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவரது தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.

இதையும் படிங்க: பழநி கோவில் நிலத்தை குறிவைத்த மோசடி கும்பல்? சார்பதிவாளர் ஜாமின் மனு ஒத்திவைப்பு! நீதிமன்றம் அதிரடி!

இந்த வழக்கை நீதிபதி புகழேந்தி விசாரித்தார். அப்போது, அரசு ஊழியர் ஒருவர் பணியில் இருக்கும்போது வைத்திருக்கக்கூடிய அதிகபட்ச ரொக்கத் தொகை குறித்து தமிழகத்தில் பொதுவான வழிகாட்டுதல்கள் இருப்பதாக தெரியவில்லை என நீதிபதி குறிப்பிட்டார்.

மேலும், இதே நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட பிற வழக்குகளில் வெறும் ரூ.1,500 வைத்திருந்ததற்காகக்கூட லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருப்பது தெரியவந்துள்ளதாக நீதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்த விவகாரத்தில் அரசுத் தரப்பின் கூடுதல் அட்வகேட் ஜெனரலிடம் விளக்கம் கோரப்பட்டது. அதற்கு பதிவுத்துறை சார்பில் 2009-ம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ஒன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பதிவுத்துறை ஊழியர்கள் பணியில் இருக்கும்போது வைத்திருக்கும் ரொக்கத் தொகை தொடர்பான சில நடைமுறைகள் குறிப்பிடப்பட்டிருந்தன.

ஆனால், இந்த சுற்றறிக்கை பதிவுத்துறைக்கு மட்டுமே பொருந்துவதாகவும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும் வகையில் பொதுவான அரசாணை அல்லது வழிகாட்டுதல் இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

தற்போதைய சூழலில் பெரும்பாலான கட்டணங்களை மக்கள் டிஜிட்டல் முறையில் செலுத்தும் நிலையில், அரசு அலுவலகத்துக்கு செல்லும்போது ஊழியர்கள் கணிசமான அளவு ரொக்கப் பணம் வைத்திருப்பது தொடர்பாக தெளிவான விதிமுறைகள் அவசியம் என நீதிமன்றம் கூறியது.

இத்தகைய வழிகாட்டுதல்கள் ஊழலை கட்டுப்படுத்துவதுடன், அரசு ஊழியர்கள் தேவையின்றி துன்புறுத்தப்படுவதையும் தடுக்கும் என நீதிபதி குறிப்பிட்டார். எனவே, பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் வைத்திருக்கக்கூடிய ரொக்கத் தொகைக்கு சீரான வரம்பு நிர்ணயிப்பது தொடர்பாக அரசு பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இதுதொடர்பாக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை செப்டம்பர் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதனால், தமிழக அரசு ஊழியர்களுக்கான ரொக்கப் பண வரம்பு குறித்து எதிர்காலத்தில் புதிய வழிகாட்டுதல் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதையும் படிங்க: நேபாள வெள்ளம்: முதல்வர் விஜய் உத்தரவில் தமிழர்களை மீட்க டெல்லியில் முகாமிட்ட 4 அமைச்சர்கள்! முக்கிய முடிவு?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share