×
 

சுற்றுலாவில்  நம்பர் 1 தமிழகம் தான்! 33 கோடி சுற்றுலா பயணிகள் வருகை; அமைச்சர் ராஜேந்திரன் பெருமிதம்!

இந்தியாவிலேயே 33 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகையுடன் சுற்றுலாத் துறையில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக அமைச்சர் ராஜேந்திரன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் வருகையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது; இந்த ஆண்டு மட்டும் சுமார் 33 கோடி சுற்றுலாப் பயணிகள் தமிழகத்திற்கு வருகை தந்து சாதனை படைத்துள்ளனர் எனச் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் நடத்தப்படும் ‘50-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி 2026’-ஐ அமைச்சர்கள் ராஜேந்திரன், மா.சுப்பிரமணியன் மற்றும் சேகர்பாபு ஆகியோர் இன்று கோலாகலமாகத் தொடங்கி வைத்தனர். திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை விளக்கும் வண்ணமும், பொதுமக்களுக்குப் பொழுதுபோக்கு அளிக்கும் விதமாகவும் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பொருட்காட்சி இன்று முதல் அடுத்த 70 நாட்களுக்குச் சென்னைவாசிகளுக்குத் திருவிழா விருந்தாக அமையவுள்ளது.

தீவுத்திடலில் நடைபெற்று வரும் இந்தப் பொருட்காட்சிக்காகத் தமிழக அரசு ரூ.1.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் 41 மாநில அரசு அரங்குகள், மத்திய அரசு அரங்குகள் உட்பட மொத்தம் 43 பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. விழாவில் பேசிய அமைச்சர் ராஜேந்திரன், "புதிய சுற்றுலா கொள்கையின் கீழ் சர்வதேச தரத்தில் 300 இடங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஏற்காடு மற்றும் ஏலகிரி மலைத்தலங்களில் 'கேபிள் கார்' வசதிக்கும், முட்டுக்காட்டில் ரூ.5 கோடியில் மிதவை உணவகத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என்றார். இந்தப் பொருட்காட்சி மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 36,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: "T20 World Cup-ல் ட்விஸ்ட்!" வேற ஊர்ல வைங்க! - இந்தியா வராமல் அடம் பிடிக்கும் வங்கதேசம்.. ஷாக் ஆன ICC!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளில் 25 சதவீதம் பேர் மருத்துவச் சுற்றுலாவிற்காகத் தமிழகத்தையே தேர்ந்தெடுக்கின்றனர்; ஆண்டுக்கு 15 லட்சம் பேர் நமது மருத்துவச் சேவையைப் பெறுகின்றனர்" எனத் தரவுகளைப் பகிர்ந்தார். அமைச்சர் சேகர்பாபு, "அடுத்த ஆண்டு 51-வது பொருட்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக அரியணையில் அமர்ந்து தொடங்கி வைப்பார் என அரசியல் அனல் தெறிக்கப் பேசினார். பொருட்காட்சிக்கு வர விரும்புவோர் ஆன்லைனில் (www.ttdcfair.com) டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். நுழைவுக் கட்டணமாகப் பெரியவர்களுக்கு ரூ.40-ம், சிறுவர்களுக்கு ரூ.25-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 25-க்கும் மேற்பட்ட புதுமையான விளையாட்டுச் சாதனங்கள் குழந்தைகளுக்காகக் காத்திருக்கின்றன.

இதையும் படிங்க:  "மேக் இன் இந்தியா - கடலிலும் ஒரு சாதனை'' சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக இன்று களமிறங்கும் ‘சமுத்திரா பிரதாப்’! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share