×
 

தமிழகத்தில் மதுபான விலை பாட்டிலுக்கு ரூ.20 வரை உயர்வு! புதிய வரி! எதற்காக தெரியுமா?

தமிழகத்தில் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுகிறது. பாட்டிலுக்கு தலா, 20 ரூபாய், சுற்றுச்சூழல் மற்றும் சமூக தீர்வை வரியாக விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் மதுபானங்களின் விலை விரைவில் உயரக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. டாஸ்மாக் மூலம் விற்பனை செய்யப்படும் மதுபான பாட்டில்களுக்கு தலா ரூ.20-க்கு மிகாமல் சுற்றுச்சூழல் மற்றும் சமூக தீர்வை வரி விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சட்டத் திருத்த மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் தினசரி அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மதுபானம் விற்பனை செய்யப்பட்ட பிறகு காலி பாட்டில்களை முறையாக சேகரித்து மறுசுழற்சி செய்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருந்து வருகின்றன. குறிப்பாக பயன்படுத்தப்பட்ட பாட்டில்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்ற தேவையும் அதிகரித்துள்ளது.

இதையடுத்து, மதுபான பாட்டில்களுக்கு புதிய தீர்வை வரியை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மதுபான பாட்டில் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.20 வரை சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத்தீர்வை வசூலிக்க வழிவகை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: வருவாயை விட மக்கள் நலனே முக்கியம்! டாஸ்மாக் ஆன்லைன் முன்பதிவு திட்டத்திற்கு டிடிவி தினகரன் கண்டனம்!

இந்த வரியை மதுபான விற்பனையில் ஈடுபடும் வணிகர்களே செலுத்த வேண்டிய பொறுப்பில் இருப்பார்கள். மதுபானத்தின் வகை, அதன் அளவு மற்றும் மதுபானம் அடைக்கப்பட்டுள்ள பாட்டில் அல்லது கொள்கலனின் தன்மைக்கு ஏற்ப வெவ்வேறு கட்டண விகிதங்களை அரசு நிர்ணயிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வரி மூலம் கிடைக்கும் வருவாய் பல்வேறு சமூக மற்றும் சுற்றுச்சூழல் பணிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக காலி மதுபான பாட்டில்களை மறுசுழற்சி செய்வது, அவற்றை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துவது மற்றும் மறுபயன்பாட்டை ஊக்குவிப்பது போன்ற பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படலாம்.

மேலும், மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு மற்றும் மீட்பு திட்டங்களுக்கும் இந்த நிதியை பயன்படுத்த முடியும். மதுப்பழக்கத்தால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கான நலத்திட்டங்கள், மதுவால் ஏற்படும் உடல்நல மற்றும் சமூக பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களுக்கும் நிதி பயன்படுத்தப்படலாம்.

இதுதவிர, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காடுகள் மற்றும் வனவிலங்குகளை பாதுகாத்தல், பாதிக்கப்பட்ட இயற்கை வளங்களை மீட்டெடுத்தல் போன்ற பணிகளுக்கும் வருவாய் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 2006-ம் ஆண்டு மதிப்புக்கூட்டு வரிச் சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்தால், மதுபானங்களின் விலையில் புதிய வரிச்சுமை ஏற்படுவதால் நுகர்வோர் செலுத்தும் தொகையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

ஒருபுறம் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் திட்டங்களுக்கு நிதி திரட்டும் நடவடிக்கையாக இது பார்க்கப்பட்டாலும், மறுபுறம் ஏற்கனவே அதிகரித்து வரும் மதுபான விலைக்கு கூடுதல் சுமை ஏற்படுத்தும் நடவடிக்கையாகவும் இது நுகர்வோர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: இனி டாஸ்மாக் மதுபானம் வாங்க ஆன்லைன் போதும்! நாளை முதல் புதிய சேவை!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share