×
 

ஆயுத பூஜை, தீபாவளிக்கு டிக்கெட் விலை எகிறுமா? ஆம்னி பஸ்களுக்கு தமிழக அரசு அதிரடி செக்!

விடுமுறை காலங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதை பயன்படுத்தி சில ஆம்னி பஸ் நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுவது வழக்கம்.

சென்னை: தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட விதிமீறல்களை தடுக்க, தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட சிறப்பு குழுக்களை அமைக்க தமிழக போக்குவரத்து ஆணையரகம் திட்டமிட்டுள்ளது.

வரும் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியும், அக்டோபர் 19-ம் தேதி ஆயுத பூஜையும் வர உள்ளன. இதைத் தொடர்ந்து நவம்பர் 8-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அடுத்தடுத்து பண்டிகைகள் மற்றும் விடுமுறை நாட்கள் வருவதால், இந்த காலகட்டத்தில் ஆம்னி பஸ்களின் இயக்கம் வழக்கத்தை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுமுறை காலங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதை பயன்படுத்தி சில ஆம்னி பஸ் நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுவது வழக்கம். இதுதவிர, வாகன வரி நிலுவை, அதிக சுமைகளை ஏற்றிச் செல்வது, உரிய பர்மிட் இல்லாமல் பஸ்களை இயக்குவது உள்ளிட்ட விதிமீறல்களும் நடைபெற வாய்ப்பு உள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: டாஸ்மாக் கடையடைப்பு... போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்..! சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு கண்டனம்..!!

இதனை கண்காணித்து கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் ஒரு வட்டார போக்குவரத்து அதிகாரி உட்பட 3 பேர் இடம்பெறுவார்கள். இந்த குழுக்கள் நெடுஞ்சாலைகள், முக்கிய பஸ் நிலையங்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் அதிகம் இயக்கப்படும் பகுதிகளில் திடீர் சோதனைகளை மேற்கொள்ள உள்ளன.

சோதனையின்போது விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்படும். விதிமீறலின் தன்மைக்கு ஏற்ப உரிய அனுமதி இல்லாத இயக்கத்தை தடுக்கவும், பர்மிட் ரத்து உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதிகாரிகள் தயாராக உள்ளனர்.

பண்டிகை கால பயணங்களின்போது பொதுமக்கள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், தொடர் விடுமுறை மற்றும் தீபாவளி காலத்தில் ஆம்னி பஸ் சேவைகளில் விதிமீறல்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள் நிலை என்ன? அறிக்கை கொடுங்க! மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share