×
 
☰

தமிழகத்தில் 31 ஆயிரம் வீடுகள் பாதியில் நிறுத்தம்! பணம் கொடுத்தும் கட்டி முடிக்கவில்லை! ரூ.100 கோடி திரும்ப வருமா?

இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் இதுவரை 6 லட்சத்து 75 ஆயிரத்து 751 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சென்னை: மத்திய அரசின் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்பட்டும், தமிழகத்தில் சுமார் 31 ஆயிரம் வீடுகள் இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட சுமார் ரூ.100 கோடி தொகையைத் திரும்பப் பெறுவதில் ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்களுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஊரகப் பகுதிகளில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்ட நிதியுதவி வழங்கும் நோக்கில், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் திட்டம் 2016ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒரு வீட்டுக்கு ரூ.1.20 லட்சம் வழங்கப்படுகிறது. இதில் 40 சதவீதமான ரூ.48 ஆயிரத்தை தமிழக அரசும், மீதித் தொகையை மத்திய அரசும் வழங்குகின்றன.

இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் இதுவரை 6 லட்சத்து 75 ஆயிரத்து 751 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், பல ஆண்டுகளாக நிதி வழங்கப்பட்டும் ஆயிரக்கணக்கான வீடுகள் முழுமையடையாமல் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: உதயநிதி இல்லத்துக்கு அருகிலேயே புது வீட்டிற்கு மாறும் முதல்வர் விஜய்?! ரெடியாகும் பிரமாண்ட பங்களா?!

இத்திட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டதும், முதற்கட்டமாக ரூ.26 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதற்கான கட்டுமானப் பணிகள் முடிந்த பின்னர், அடுத்தடுத்த கட்டங்களுக்கான நிதி விடுவிக்கப்படுகிறது. பொதுவாக ஓராண்டுக்குள் வீட்டைக் கட்டி முடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகியும் வீடு கட்டி முடிக்கப்படாவிட்டால், வழங்கப்பட்ட நிதியைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த நடைமுறையின்படி, தமிழகத்தில் சுமார் 31 ஆயிரம் பயனாளிகளுக்கு பல்வேறு கட்டங்களாக நிதி வழங்கப்பட்டும் வீடுகள் முழுமையடையவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. இவர்களிடமிருந்து சுமார் ரூ.100 கோடியைத் திரும்பப் பெற வேண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அரசு வழங்கிய தொகை போதுமானதாக இல்லாததால் கட்டுமானத்தைத் தொடர முடியவில்லை எனப் பயனாளிகள் தெரிவிப்பதாக ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையே, தமிழக அரசின் வீடு கட்டும் திட்டத்தில் வழங்கப்படும் தொகை ரூ.3.50 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மத்திய அரசின் திட்டத்தில் விண்ணப்பங்கள் குறைந்துள்ளதாகவும், ஆண்டு இலக்கு 70 ஆயிரமாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேநேரத்தில், ஐந்தாண்டுகளில் 5 லட்சம் வீடுகள் கட்டும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசும் நிதியுதவியை அதிகரித்தால் மட்டுமே திட்டத்தைச் செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்களைக் குறைக்க முடியும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: நீலகிரியில் கனமழை எச்சரிக்கை! வாகனப் போக்குவரத்துக்குத் தடை! கலெக்டர் லட்சுமி பவ்யா விடுத்த அலர்ட் மெசேஜ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share