உதயநிதி ஸ்டாலின் கைது சரியானதுதான்! எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் அதிரடி!
இந்தியாவே வியந்து பார்க்கும் வகையில் முதலமைச்சர் விஜய் செயல்பட்டு வருகிறார் என்றும் உதயநிதி ஸ்டாலின் கைது சரியானது தான் என்றும் கே ஏ செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய்யின் ஆளுமை மற்றும் நிர்வாகச் செயல்பாடுகளைப் பார்த்து இந்தியாவே வியந்து நிற்கிறது; அவர் உயிருடன் இருக்கும் வரை அவர்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தொடர்வார் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் மூத்த தலைவரும், சட்டமன்ற அவைத் தலைவருமான கே.ஏ.செங்கோட்டையன் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
நாளை சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், பனையூரில் அமைந்துள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கே.ஏ.செங்கோட்டையன், தவெக அரசின் செயல்பாடுகள் மற்றும் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்தும் அடுக்கடுக்கான கருத்துகளைப் பதிவு செய்தார்.
முதலமைச்சர் விஜய்யின் நடவடிக்கைகளையும் நிகழ்வுகளையும் பார்க்கும் போது இவர் ஏன் இந்தியாவை ஆளக்கூடாது? என்பது போலச் செயல்பட்டு வருகிறார். இந்தியாவே அவரை வியந்து பார்க்கிறது. ஒரு தூய தலைவராக அவர் திகழ்கிறார். தேர்தல் களத்திற்கு வந்த வெறும் 2 மாதங்களிலேயே கட்சியின் சின்னத்தை மக்களிடம் கொண்டு சென்று வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
இதையும் படிங்க: “ஒரு செங்கல்லை வைக்கக்கூட...” - மேகதாது அணை விவகாரத்தில் கொந்தளித்த செங்கோட்டையன்...!
பெண்களைக் கொச்சைப்படுத்திப் பேசும் நபரைக் கையில் வைத்திருக்கும் எதிர்க்கட்சியாகச் செயல்பட்டு வருகிறார்கள். பெண்களுக்கு எதிராக இழிவாகப் பேசுவது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இதன் காரணமாகவே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் யாரும் இக்கைதுக்கு எதிராகப் போராடவில்லை. 'கைது நடவடிக்கை சரியானதுதான்' என்றே பொதுமக்களும் நினைக்கிறார்கள். பெண்களை இழிவுபடுத்தியதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சியினரும் வலியுறுத்திய நிலவரத்தில்தான் இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது.
திமுகவும் அதிமுகவும் வடதுருவம், தென்துருவம் என்று வெளியில் பேசிக் கொள்வார்கள். ஆனால், திமுகவோடு மறைமுகமாக இணைந்து மீண்டும் ஆட்சிக்கு வர அதிமுக நினைத்தது. தவெகவின் அசுர வளர்ச்சியைப் பார்த்து வயிற்றெரிச்சலில் பேசி வருகிறார்கள்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோர் உயிருடன் இருந்தவரை அவர்கள் மட்டுமே எவ்வாறு முதலமைச்சர்களாக இருந்தார்களோ, அதேபோல் விஜய் இருக்கும் வரை அவர்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருப்பார்.
மிகத் தெளிவான, தொலைநோக்குச் சிந்தனையோடு தவெக ஆட்சி இயங்கி வருகிறது. நாளைக்கே தேர்தல் வைத்தாலும் தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறுவது உறுதி என எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கே.ஏ.செங்கோட்டையன் ஆவேசமாக உரையாற்றினார்.
இதையும் படிங்க: விஜய் முதல்வராக இருக்கும் வரை! மேகதாது அணை கட்ட ஒரு செங்கல் கூட வைக்க முடியாது! அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி!