சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்! நாளையும் நாளை மறுநாளும் மாறப்போகுது வானிலை! குடை ரெடியா?
செப்டம்பர் 3-ம் தேதியும் தமிழகத்தில் சில பகுதிகளில் மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை மற்றும் வெயில் மாறி மாறி காணப்படும் நிலையில், சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் செப்டம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவி வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தால் தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். இதேபோல், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும்.
இதையும் படிங்க: இன்று முதல் ஆட்டம் ஆரம்பம்! தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கும்! சென்னைக்கும் முக்கிய எச்சரிக்கை!
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய 14 மாவட்டங்களில் செப்டம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிப்பவர்கள் அடுத்த இரண்டு நாட்களில் வானிலை மாற்றத்தை கவனத்தில் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மழை பெய்யும் நேரங்களில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.
செப்டம்பர் 3-ம் தேதியும் தமிழகத்தில் சில பகுதிகளில் மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யலாம். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தின் பிற பகுதிகளிலும், காரைக்கால் பகுதியிலும் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். தற்போதைய வானிலை நிலவரத்தை பொறுத்தவரை, மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான கனமழை எதிர்பார்ப்பு இல்லை. குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் மழைக்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக வானிலை மையத்தின் அறிவிப்பு தெரிவிக்கிறது.
இதையும் படிங்க: மீண்டும் ஆட்டம் ஆரம்பம்! வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு! தமிழகத்தில் வெளுத்து வாங்குமா மழை ?