ரேஷன் கார்டில் முகவரி மாற்றத்துக்கு அமலானது புதிய விதிமுறைகள்!! சிலிண்டர் ரசிது முக்கியம்?! தெரியுமா உங்களுக்கு?!
ரேஷன் கார்டில் முகவரி மாற்றத்துக்கு விண்ணப்பிக்கும்போது, விண்ணப்பதாரரின் வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் ரசீது மற்றும் விண்ணப்பதாரரின் தந்தை மற்றும் மனைவியின் தந்தை வீட்டு சிலிண்டர் ரசீதுகளை அளிக்கும் வகையில், விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
சென்னை: ரேஷன் கார்டில் முகவரியை மாற்ற விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பதாரரின் சமையல் காஸ் சிலிண்டர் ரசீது மட்டுமின்றி, அவரது தந்தை மற்றும் மனைவியின் தந்தை வீட்டின் காஸ் ரசீதுகளையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. இந்த மாற்றம் பொதுமக்களிடையே பெரும் சிரமத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
வீடு மாறி செல்லும் மக்கள், பொது வினியோகத் திட்ட இணையதளம் மூலம் ரேஷன் கார்டு முகவரி மாற்றத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். புதிய முகவரிக்கான ஆதாரமாக ஆதார் கார்டு, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ்புக் போன்ற ஆவணங்களை பதிவேற்றம் செய்யும் வழக்கம் இருந்து வந்த நிலையில், தற்போது மூன்று காஸ் சிலிண்டர் ரசீதுகள் கட்டாயமாகக் கேட்கப்படுகின்றன.
பாதிக்கப்பட்ட பலர் கூறுகையில், “ஆதார், மின் கட்டண அட்டை, வங்கி புத்தகம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் கூட தங்கள் சொந்த வீட்டு காஸ் ரசீதை பதிவேற்றம் செய்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. அதிகாரிகளிடம் கேட்டால், விண்ணப்பதாரர், அவரது தந்தை மற்றும் மனைவியின் தந்தை ஆகிய மூவரின் காஸ் ரசீதுகளையும் பதிவேற்றம் செய்யுமாறு கூறுகிறார்கள். இது மிகவும் சிரமமான நடைமுறை” என்றனர்.
இதையும் படிங்க: எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!! ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!
குறிப்பாக காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர்கள் இந்தப் புதிய விதியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பெற்றோர் ஏற்காத நிலையில், அவர்களிடம் காஸ் ரசீது பெறுவது எப்படி சாத்தியம் என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ரேஷன் கார்டில் உறுப்பினர் பெயர் நீக்கம் செய்யும் போதும் இதே மூன்று ரசீது விதி பின்பற்றப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
ஏற்கெனவே வாடகை வீடுகளில் வசிப்பவர்கள், வெளியூர் மாறி செல்பவர்கள், புதிதாக திருமணமான தம்பதிகள் போன்றோருக்கு இந்த விதிமுறை பெரும் தலைவலியாக மாறியுள்ளது. பலர் மாதக்கணக்கில் முயற்சி செய்தும் முகவரி மாற்றம் செய்ய முடியாமல் தவிப்பதாகக் கூறுகின்றனர்.
இந்தப் புதிய நடைமுறை மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கிறது என சமூக ஆர்வலர்கள் விமர்சனம் செய்கின்றனர். அரசு இந்த விதியை மறுபரிசீலனை செய்து, மக்களுக்கு ஏற்ற வகையில் எளிமைப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: இதை ஏன் இத்தன நாளா மறைச்சீங்க முதல்வர் விஜய்?! 40 நாட்களுக்கு பின் வெளிவந்த சீக்ரெட்! எதிர்க்கட்சிகள் விமர்சனம்!