திமுகவின் காலை உணவுத்திட்டம்! நோ சொல்லாத விஜய்! முதல்நாளிலேயே பசியாறிய மாணவர்கள்!
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று (ஜூன்.04) திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் இன்று முதல் மீண்டும் செயல்படுத்தப்பட்டது.
சென்னை: கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வருகை தந்த நிலையில், அவர்களுக்கு சுடச்சுட தயாரான சத்தான காலை உணவு வழங்கப்பட்டது. மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு இட்லி, சாம்பார், பொங்கல், கேழ்வரகு கஞ்சி உள்ளிட்ட சத்தான உணவுகள் வழங்கப்பட்டன. பள்ளிக்கு வரும் மாணவர்களின் ஊட்டச்சத்து தேவையை கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் உணவை உட்கொண்ட காட்சிகள் பல பள்ளிகளில் காணப்பட்டன.
இந்தக் காலை உணவுத் திட்டத்தை 2022-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைத்தார். தி.மு.க. ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முக்கிய நலத்திட்டம் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, ‘இந்தத் திட்டத்தை தொடர வேண்டும்’ என தி.மு.க. சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழக வெற்றிக் கழக அரசு இந்தத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இத திமுக ஆட்சியில கேப்பீங்களா? காலி பண்ணிருப்பாங்க! பிரஸ்மீட்டில் டென்ஷனான செங்கோட்டையன்!!
பள்ளி திறப்பு நாளான இன்று மாணவர்கள் பெரும் உற்சாகத்துடன் வருகை தந்தனர். ஆசிரியர்கள் மாணவர்களை வரவேற்று, புதிய கல்வியாண்டுக்கான அறிவுறுத்தல்களை வழங்கினர். கோடை வெயிலுக்குப் பிறகு பள்ளி வரும் மாணவர்களுக்கு சத்தான உணவு வழங்கப்படுவது அவர்களின் உடல் நலத்துக்கும், கல்வி ஆர்வத்துக்கும் உதவியாக அமையும் என பெற்றோர்கள் வரவேற்றுள்ளனர்.
இந்தத் திட்டத்தினால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்ப மாணவர்கள் பயனடைவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். காலை உணவுத் திட்டம் மாணவர்களின் வருகை விகிதத்தை அதிகரிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டைத் தடுக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே சீரான முறையில் உணவு வழங்கப்பட்டது மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: நீட் மறுத்தேர்வு வினாக்களும் கசிவு? சைபர் குற்றப் பிரிவு விசாரணை! மாணவர்கள் அதிர்ச்சி!