×
 

மேற்கு தொடர்ச்சி மலையில் 50 கி.மீ வேகத்தில் வீசப்போகும் பலத்த காற்று! வானிலை மையம் அதிரடி வார்னிங்!

தெற்கு குஜராத் முதல் வடக்கு கேரளா வரை காற்றழுத்த தாழ்வுப் பாதை நீடிப்பதால், நீலகிரி மற்றும் கோவை மலைப்பகுதிகளுக்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சின்னக்கல்லாரில் 18 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

தெற்கு குஜராத் முதல் வடக்கு கேரளா வரையிலான கடல் பகுதியில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாகத் தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களான நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நிலவிய வானிலை நிலவரங்களின்படி, தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, கோயம்புத்தூர் மாவட்டத்தின் சின்னக்கல்லாரில் மிக அதிகபட்சமாக 180 மில்லிமீட்டர் (18 சென்டிமீட்டர்) மழை பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாகச் சோலையாரில் 11 செ.மீ, சின்கோனா, வால்பாறை, அவலாஞ்சியில் தலா 9 செ.மீ மழையும், மேல் பவானியில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. அதேநேரம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் முற்றிலும் வறண்ட வானிலையே நிலவியது.

வெப்பநிலையைப் பொறுத்தவரை, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரிய மாற்றங்கள் ஏதுமில்லை. சென்னை விமான நிலையப் பகுதியில் அதிகபட்ச வெப்பநிலையாக 39.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சமவெளிப் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையாகக் கோவை விமான நிலையத்தில் 22.4 டிகிரி செல்சியஸும், மலைப்பகுதிகளில் உதகமண்டலத்தில் 12.8 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. இன்று மற்றும் நாளை (ஜூலை 9, 10) கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதர மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும், சென்னை உள்ளிட்ட ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். வரும் ஜூலை 11 முதல் 13 வரை தமிழகத்தின் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்; வெயில் அளவு 39 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

இதையும் படிங்க: தமிழக வானிலை முன்னறிவிப்பு: கோவை, நீலகிரியில் கனமழை... மீனவர்களுக்கு எச்சரிக்கை!

கடல் பகுதி எச்சரிக்கையாக, ஆந்திரக் கடலோரம், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகம் வரையிலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் ஜூலை 13-ஆம் தேதி வரை மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை மைய விஞ்ஞானி முனைவர் வி. ஆர். துரை எச்சரித்துள்ளார். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தீவிரமடைந்து வரும் இந்த மழைக் காலம், சமவெளிப் பகுதி மக்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்யும் என்றாலும் மலைப்பகுதிப் பயணங்களின் போது பொதுமக்கள் போதிய பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இன்று எங்கெங்கு மிதமான மழை பெய்யும் தெரியுமா..?? வானிலை மையம் அப்டேட்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share