×
 

தமிழகத்தில் 4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும்! வானிலை ஆய்வு மையம் அதிரடி எச்சரிக்கை!

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என்றும், கடலோர மாவட்டங்களில் அதிகப்படியான உஷ்ணம் மற்றும் ஈரப்பதம் காரணமாக மக்கள் கடுமையான அசௌகரியங்களைச் சந்திக்க நேரிடும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஒருசில இடங்களில் மட்டுமே மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. அதிகபட்சமாகச் கோவை மாவட்டத்தின் சின்னக்கல்லார் பகுதியில் 19.0 மில்லிமீட்டர் (2 சென்டிமீட்டர்) மழை பதிவாகியுள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் முற்றிலும் வறண்ட வானிலையே நிலவியது. அதேவேளையில், மாநிலத்தின் பல பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், அதிகபட்ச வெப்பநிலையாக மதுரை விமான நிலையப் பகுதியில் 39.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சமவெளிப் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையாகக் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் 23.3 டிகிரி செல்சியஸும், மலைப்பகுதிகளில் உதகமண்டலத்தில் 11.8 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளதாக வானிலை மைய விஞ்ஞானி முனைவர் வி. ஆர். துரை வெளியிட்டுள்ள புள்ளிவிவர விபரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பின்படி, இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்காலில் வறண்ட வானிலையே நீடிக்கும். தொடர்ந்து ஜூலை 13 முதல் 18-ஆம் தேதி வரையிலும் மலை மாவட்டங்களில் லேசான மழையும், பிற பகுதிகளில் வறண்ட சூழலும் நிலவக்கூடும். எனினும், ஜூலை 16 வரை தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளதால், குறிப்பாக ஜூலை 14 வரை கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் கடுமையான புழுக்கம் மற்றும் உஷ்ண அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிடும். சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸை ஒட்டி பதிவாக வாய்ப்புள்ளதால் வெப்பக்காற்று வீசக்கூடும்.

இதையும் படிங்க: நீலகிரிக்கு ரெட் அலர்ட்! 2 நாட்களுக்கு 60 கி.மீ வேகக் காற்றுடன் கனமழை எச்சரிக்கை!

கடல் பகுதி நிலவரங்களைப் பொறுத்தவரை, ஜூலை 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த சூறாவளிக்காற்று வீசக்கூடும். இதேபோல் அந்தமான் கடல், ஆந்திரக் கடலோரம் மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், அரபிக்கடல் பகுதிகளிலும் வெவ்வேறு நாட்களில் மணிக்கு 40 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், குறிப்பிட்ட அந்தந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாமென்று மண்டல வானிலை ஆய்வு மையம் பலத்த அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது.

இதையும் படிங்க: தமிழக வானிலை முன்னறிவிப்பு: கோவை, நீலகிரியில் கனமழை... மீனவர்களுக்கு எச்சரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share