ஆதிதிராவிடர் நலத்துறையில் மோசடி?! ஆந்திரா நிறுவனம் கையில் டெண்டர்! அம்பலப்படுத்திய மாஜி ஐஏஎஸ் |
ஆதிதிராவிடர் நலத்துறை யாருக்கானது? என ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி, கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தலித் மாணவர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டிருந்தாலும், அதிகாரிகளின் ஊழல் மற்றும் தவறான நிர்வாகத்தால் பாழ்படுத்தப்பட்டு வருவதாக ஓய்வுபெற்ற IAS அதிகாரி சிவகாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
"ஆதிதிராவிடர் நலத்துறை யாருக்கானது?" என்ற கேள்வியை எழுப்பிய அவர், அமைச்சர் சி.என். அசோக் மதிவேந்தன் இந்தப் புகார்களை கூர்ந்து கவனிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். துறையில் நடக்கும் டெண்டர் ஊழல், உணவுத் தரமின்மை, புகார்களை மறைப்பது போன்றவற்றை அவர் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் ஆதிதிராவிடர் நலத்துறை கீழ் செயல்படும் 28 விடுதிகளில் 3,500-க்கும் மேற்பட்ட தலித் மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். இவர்களுக்கு 'பொது சமையல் அறை' திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்படுகிறது.
ஆனால், இத்திட்டத்தின் டெண்டர்களை வெளிப்படையாக அறிவிப்பதில்லை. நேரடியாக ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த 'ஸ்ரீ ஹரி என்டர்பிரைசஸ்' என்ற தனியார் நிறுவனத்துக்கு அதிகாரிகள் ஒப்புதல் வழங்கியுள்ளனர். இந்த நிறுவனம் அரசு நிர்ணயித்த உணவு பட்டியலை பின்பற்றாமல், வடமாநில சமையலர்களைப் பயன்படுத்தி இரண்டு இடங்களில் உணவு தயாரித்து விநியோகம் செய்கிறது.
இதையும் படிங்க: இத்தாலியில் இன்வெஸ்ட் செய்ய ப்ளான்!! நேரு தரப்பில் நடந்த பேச்சு!! அமலாக்கத் துறை விசாரணையில் பகீர்!
மாணவர்களின் உண்மையான எண்ணிக்கைக்கு ஏற்ப உணவு கட்டணம் வழங்கப்பட வேண்டும் என்றாலும், விடுமுறை நாட்கள், மாணவர்கள் விடுதியில் தங்காத நாட்கள் கூட சேர்த்து நிறுவனத்துக்கு பணம் செலுத்தப்படுகிறது. இதனால், ஊழல் நடக்கிறது என்று சிவகாமி குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், 'அமுத சுரபி' இணையதளத்தில் உணவின் தரம் நல்லது, போதுமான அளவு உள்ளது என்று பதிவு செய்ய விடுதி காப்பாளர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். வருகைப் பதிவேட்டில் மாணவர்கள் தினசரி தங்கி உணவு சாப்பிடுவதாகப் பொய் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் உணவின் தரம் குறைவு, அளவு போதாது என்று பல்வேறு புகார்களை அளித்து வருகின்றனர். ஆனால், துறை செயலர், ஆணையர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் இந்தப் புகார்களை அமைச்சரிடம் தெரிவிக்காமல், தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக அறிக்கைகளை 'பூசி மெழுகி' அனுப்புகின்றனர். இது துறையின் நோக்கத்தை மீறிய செயலாகும் என்று சிவகாமி கூறியுள்ளார்.
ஓய்வுபெற்ற IAS அதிகாரி சிவகாமி, தனது அறிக்கையில், "ஆதிதிராவிடர் நலத்துறை தலித் மற்றும் பழங்குடியினர் மாணவர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டது. ஆனால், அதிகாரிகளின் ஊழல் மற்றும் தவறான செயல்களால் இத்துறை பாழ்படுத்தப்பட்டு வருகிறது.
அமைச்சர் மதிவேந்தன் இந்தப் புகார்களை எளிதாகக் கடந்து செல்லாமல், கூர்ந்து விசாரிக்க வேண்டும். துறையை அழிக்கும் அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் உணவு உரிமை, தரம், வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும்" என்று கோரியுள்ளார்.
இந்தப் புகார்கள், தமிழ்நாட்டின் சமூகநலத் துறைகளில் ஏற்படும் ஊழல் குறித்து புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளன. சிவகாமி, முன்னதாகவே ஆதிதிராவிடர் துறையில் ஏற்படும் ஊழல் குறித்து பலமுறை குரல் கொடுத்தவர். இந்தப் பிரச்சனைக்கு அரசு உடனடி தீர்வு காண வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர்.
இதையும் படிங்க: ரொம்ப பெரிய அவமானம்! அமெரிக்காவை விட்டு வெளியேறும் இந்திய மாணவர்கள்! டிரம்ப் வேதனை!