சிங்கப்பூர் கவிஞர் புதுமைத்தேனீ மா.அன்பழகன் காலமானார்..!! சோகத்தில் மூழ்கிய இலக்கிய உலகம்..!!
பிரபல தமிழ் இலக்கியவாதியும், சிங்கப்பூர் கவிமாலை அமைப்பின் காப்பாளருமான புதுமைத்தேனீ மா. அன்பழகன் உடல்நலக்குறைவால் காலமானார்.
தமிழ் இலக்கிய உலகம் ஒரு முக்கிய தூணை இழந்துள்ளது. பிரபல தமிழ் எழுத்தாளரும், கவிஞருமான புதுமைத்தேனீ மா. அன்பழகன் உடல்நலக் குறைவால் தனது 83 வயதில் காலமானார். சிங்கப்பூர் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அவரது மறைவு, தமிழகம் மற்றும் சிங்கப்பூர் இரு நாடுகளிலும் ஆழ்ந்த அதிர்ச்சியையும், இரங்கலையும் ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் கிராமத்தில் 1943ஆம் ஆண்டு பிறந்த மா. அன்பழகன், வணிக நிர்வாகத்தில் இளங்கலைப் பட்டம் (BBA) பெற்றவர். வணிகத் துறையில் ஈடுபட்டிருந்தபோதிலும், இலக்கியத்தில் அவரது ஆர்வம் இளம் வயதிலிருந்தே தீவிரமாக இருந்தது. அவரது சகோதரர் மா. மீனாட்சி சுந்தரம் வேதாரண்யம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
தற்போதைய திமுக வேட்பாளர் புகழேந்தியின் சித்தப்பா என்பதும் குறிப்பிடத்தக்கது.1971ஆம் ஆண்டு, அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் தலைமையில், எம்.ஜி.ஆர். முன்னிலையில் அவரது திருமணம் நடைபெற்றது. இது அவரது வாழ்க்கையில் ஒரு முக்கிய நிகழ்வாகப் பதிவாகியுள்ளது. கடந்த 32 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் வசித்து வந்த அன்பழகன், அங்கு தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாகத் திகழ்ந்தார்.
இதையும் படிங்க: மாம்பழம் இனி இனிக்காது!! ராமதாஸ் காட்டம்!! மாம்பழத்திற்குள் துரோகம் என்னும் விஷம் புகுந்துவிட்டதாக சாடல்!
சிங்கப்பூர் கவிமாலை அமைப்பை எட்டு ஆண்டுகள் தலைமை தாங்கி வழிநடத்திய அவர், இறுதிக்காலம் வரை அதன் காப்பாளராகப் பொறுப்பேற்றிருந்தார். இளம் கவிஞர்களை ஊக்குவித்து, அவர்களின் படைப்புகளை வளர்க்க அவர் அளித்த ஆதரவு குறிப்பிடத்தக்கது. கவிதை, கட்டுரை, சிறுகதை, புதினம் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் தனது ஆற்றலை வெளிப்படுத்திய அவர், சுமார் 38 நூல்களை எழுதியுள்ளார். மேலும், 150க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட உறுதுணையாக இருந்து, தமிழ் இலக்கியத்தின் பரவலுக்கு பங்களித்தார்.
இலக்கியத் துறையில் அவரது சேவையைப் பாராட்டி பல உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 1990ஆம் ஆண்டு கிருஷ்ணகிரியில் நடைபெற்ற உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை விழாவில், முன்னாள் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் "கவிமாமணி" விருது பெற்றார். 2003ஆம் ஆண்டு சிங்கப்பூர் அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் "முத்தமிழ்க் காவலர்" விருதை வழங்கி கௌரவித்தார்.
திமுக இலக்கிய அணியின் மாநிலப் பொருளாளராக ஆறு ஆண்டுகள் பணியாற்றிய அன்பழகன், திராவிட இயக்கச் சிந்தனைகளுடன் இறுதிவரை இணைந்திருந்தார். திரைத்துறை மற்றும் சமூகப் பணிகளிலும் அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார். அவரது படைப்புகள் தமிழ் இலக்கியச் சூழலில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளன.
மா. அன்பழகனின் மறைவு, சிங்கப்பூர் மற்றும் தமிழக இலக்கிய உலகுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று இலக்கிய அமைப்புகளும், அரசியல் தலைவர்களும் தங்கள் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்து வருகின்றனர். அவரது பங்களிப்பு எதிர்கால தலைமுறை எழுத்தாளர்களுக்கு தொடர்ந்து உத்வேகமாக இருக்கும்.
இதையும் படிங்க: "NO CONFUSION"..! ஈஸியா ஓட்டு போடலாம்..! வாக்குச்சாவடி மையத்தில் கலர் கோடுகள்..!