தென்காசியில் வீட்டுக்குள் தயாரிக்கப்பட்ட வெடிமருந்து வெடித்து விபத்து?! நொடியில் தரைமட்டமான வீடு! 2 குழந்தைகள் படுகாயம்!
வீட்டுக்குள் இருந்த சவுந்தர்யா, 13, மற்றும் கிருத்திகா, 7, ஆகிய இருவரும் வெடிவிபத்தில் சிக்கி படுகாயமடைந்தனர்.
தென்காசி: தென்காசி ஆசாத் நகர் பகுதியில் வீட்டில் வெடிமருந்து தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் வீடு முழுவதும் இடிந்து தரைமட்டமானது. இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த 13 மற்றும் 7 வயது சிறுமிகள் இருவர் படுகாயமடைந்தனர். இதில் 7 வயது சிறுமியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆசாத் நகர் பகுதியில் சுடலை என்பவர், கணவரை இழந்த தங்கம் மற்றும் அவரது குழந்தைகளுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. சுடலை அந்த வீட்டிலேயே உரிய அனுமதியின்றி வெடிமருந்து தயாரித்து, கோவில் விழாக்களில் வானவேடிக்கை நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தி வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று மதியம் சுமார் 1 மணியளவில் வீட்டில் வெடிகள் தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பொருட்கள் திடீரென வெடித்ததாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக வீடு பலத்த சேதமடைந்து, முழுமையாக இடிந்து தரைமட்டமானது. வெடிச்சத்தத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையும் படிங்க: மழை இன்னும் முடியவில்லை! செப்.10 வரை வந்தாச்சு அலர்ட்! தமிழகத்தில் வானிலை எப்படி இருக்கும்?
மேலும், வெடிவிபத்தின் தாக்கத்தில் அருகில் இருந்த வீடுகளின் கதவுகள், ஜன்னல்கள் மற்றும் பல்வேறு பொருட்களும் சேதமடைந்து சிதறியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனால் ஆசாத் நகர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
விபத்து ஏற்பட்ட நேரத்தில் வீட்டின் வெளிப்புறத்தில் தங்கம் நின்று கொண்டிருந்ததாகவும், இதனால் அவர் உயிர் தப்பியதாகவும் கூறப்படுகிறது. வீட்டுக்குள் இருந்த சவுந்தர்யா, 13, மற்றும் கிருத்திகா, 7, ஆகிய இருவரும் வெடிவிபத்தில் சிக்கி படுகாயமடைந்தனர்.
தகவல் அறிந்த குற்றாலம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த சிறுமிகளை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் கிருத்திகாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
வெடிவிபத்துக்கான சரியான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் சிதறிக் கிடக்கும் பொருட்கள் மற்றும் தடயங்களை சேகரித்து, வெடிமருந்து அங்கு எவ்வாறு வைக்கப்பட்டது என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தென்காசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கோவில்களில் மொபைல் தடை விவகாரத்தில் திடீர் திருப்பம்! அடுத்தடுத்து சிக்கல்கள்! தீர்வாக புதிய யோசனை!