ஆசிரியர்களே மிஸ் பண்ணிடாதீங்க! TET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்...
ஆசிரியர் தகுதி தேர்வான டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TET தேர்வு ஆசிரியர்களின் கற்பித்தல் திறனையும், பாடத்திட்ட அறிவையும், குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் கல்வி முறைகள் குறித்த புரிதலையும் மதிப்பிடுகிறது. இந்தத் தேர்வு ஆசிரியர் பணியின் தரத்தை உயர்த்துவதற்கும், கல்வி முறையில் ஒரே மாதிரியான தரநிலைகளை உறுதி செய்வதற்கும் உருவாக்கப்பட்டது. இது மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்கு உதவுகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) என்பது இந்தியாவில் ஆசிரியர் பணியில் சேர விரும்புவோருக்கு அவசியமான ஒரு தகுதி மதிப்பீட்டுத் தேர்வாக அமைந்துள்ளது.
TET தேர்வின் முக்கிய நோக்கம், ஆசிரியர்களுக்கு தேவையான அடிப்படைத் தகுதியை உறுதிப்படுத்துவதே. இது, 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கான Paper I மற்றும் 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான Paper II ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்தத் தேர்வு, ஆசிரியர்களின் பாடத் திறன், கற்பித்தல் முறைகள், குழந்தைகளின் உளவியல் அமைப்புகள் மற்றும் கல்வி நோக்குகள் பற்றிய அறிவைப் பரிசோதிக்கிறது. TET சான்றிதழ் பெற்றவர்கள், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் ஆசிரியர் பணியில் சேர ஆதரவளிக்கிறது.
முன்னதாக ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெட் தேர்வு கட்டாயம் என்று உத்தரவிட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஓய்வு பெறும் வயதை அடைய ஐந்து ஆண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுத தேவை இல்லை என்று கூறியது. சிறுபான்மை நிறுவனத்தில் டெட் தேர்வை கட்டாயப்படுத்த முடியுமா என்பது குறித்து விசாரிக்க உயர் அமர்வுக்கு வழக்கு பரிந்துரை செய்யப்பட்டது. சிறுபான்மை நிறுவனங்களில் டெட் கட்டாயப்படுத்தினால் உரிமை பாதிக்குமா என்பதை விசாரிக்க உயர் அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இதையும் படிங்க: எதுக்கும் கலங்காதீங்க! ஆசிரியர்களை கைவிட மாட்டோம்... அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி
மேலும், ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி பெறாதோர் வேலையை விட்டு வெளியேறலாம் அல்லது இறுதி சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. டெட் தேர்வு கட்டாயம் என்பது ஆசிரியர்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தமிழக அரசு பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. ஆசிரியர்கள் எதற்கும் பயப்பட வேண்டாம் என்றும் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பணியில் தொடர TET கட்டாயம்.. ஷாக் கொடுத்த சுப்ரீம் கோர்ட்! ஆசிரியர்கள் அதிர்ச்சி..!